செராஸ்:
அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழாவின் வெற்றியாளராக ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
இம்பி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி சுற்றில் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாக்க முறையில் படைப்புகளை வெளிப்படுத்தி முதல் நிலை வெற்றியாளருக்கான பிளாட்டினம் விருதையும் RM2500 ரொக்கப் பரிசையும் தட்டி சென்றனர்.
2-ஆம் நிலையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியும், 3-ஆம் நிலையில் பேராக், பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியும் தங்க விருதையும் தலா ரிம 1500 ரொக்கப் பரிசையும் வென்றனர்.
அதனைத் தொடர்ந்து 4, 5, 6-ஆம் இடங்களைப் பிடித்த வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிகள் வெள்ளி விருதையும் தலா ரிம 1000 ரொக்கப் பரிசையும் பெற்றனர்.
7,8,9,10 -ஆம் நிலை வெற்றியாளர்களான நீலாய் தமிழ்ப்பள்ளி, கூலிம் தமிழ்ப்பள்ளி, பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி, பெந்தோங் தமிழ்ப்பள்ளி ஆகியவை வெண்கல விருதையும் தலா ரிம 700 ரொக்கப் பரிசையும் வென்றன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த அறிவியல் விழா இவ்வாண்டும் வெற்றியடைந்ததாக இவ்விழாவின் இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் கூறினார்.
இவ்வாண்டுக்கான இளம் ஆய்வாளர்கள் விழாவிற்கு ஆதரவு வழங்கிய நிறுவனம், சங்கம், தனிநபர்கள் ஆகிய அனைவருக்கும் சுபாஷ் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் பெற்றோர், மாணவர்கள், பார்வையாளர்கள் உட்பட சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.