செராஸ்:

கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பூப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியும் ஆண்கள் பிரிவில் எடின்பெர்க் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றியாளர் கிண்ணத்தை வென்றன.

அதனைத் தொடர்ந்து பெண்கள் பிரிவில் தம்புசாமி தமிழ்ப்பள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்த நிலையில் எடின்பெர்க் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளியும் மூன்றாம், நான்காம் இடங்களை வென்றன.

இப்போட்டியின், ஆண்கள் பிரிவில் இரண்டாவது நிலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும் மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் முறையே, சிகாம்புட் மற்றும் செந்தூல் தமிழ்ப்பள்ளிகள் வெற்றி பெற்றன.

செப்டம்பர் 27-ஆம் தேதி கோலாலம்பூர் செராஸில் அமைந்துள்ள அரேனா பேட்மிண்டன் டிபிகேஎல் மைதானத்தில் இந்தப் பூப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து சங்கம் ஏற்று நடத்திய இப்போட்டியைத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து முதல் முறையாக இப்போட்டி நடத்தப்பட்டாலும் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் முழு ஆதரவை வழங்கியதாக பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து சங்கத்தின் தலைவர் சேகரன் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், இப்பூப்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ எம்.சரவணன், ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பிசேகரன் தெரிவித்தார்.

தங்கள் அணி வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கில் மாணவர்கள் முழு மனஉறுதியுடன் போட்டியில் களமிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டியில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன.