ஷா ஆலம்:

தீபாவளி காலக்கட்டத்தில் சிலாங்கூரில் அந்நியர்கள் வியாபாரம் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கேட்டுக் கொண்டார்.

அந்நியர்கள் தற்காலிகக் கடைகள் அமைத்து உள்ளூர் இந்திய வியாபாரிகளின் விற்பனையைப் பாதிக்கின்றனர் என்றார் அவர்.

தீபாவளி காலம் என்பது இந்திய வியாபாரிகள் முக்கியமாக வருமானம் ஈட்டும் நேரம்.

இந்நேரத்தில் அந்நியர்கள் வியாபாரம் செய்வது நியாயமல்ல. உள்ளூர் வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் நடைபெற்ற SejaTi Madani திட்டத்தின் தொடக்க விழாவின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்நிய வியாபாரிகளின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், உரிய அனுமதியின்றி கடைகள் அமைக்கும் தரப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் Sejati Madani சமூக நலத் திட்ட தொடக்க விழாவும், 2025 ஆம் ஆண்டுக்கான E-Kasih பதிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

SejaTi Madani திட்டத்திற்கு இம்முறை RM32,500 000 நிதி ஒதுக்கப்பட்டதாகவும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 753 குடும்பத் தலைவர்கள் E-Kasih-விற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் பாப்பா ராய்டு சுட்டிக் காட்டினார்.

மேலும், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் மடானி அரசின் நலன்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.