கோலாலம்பூர், அக்.7 –
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மலேசிய சுற்றுலா அமைச்சு (Tourism Malaysia) தனது சமூக ஊடகத்தில் ஹலோவின் விழாவை முன்னிறுத்தியிருப்பது தொடர்பாக டிஎஸ்கே அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“மலேசியா பல்வேறு இனங்களும் பண்பாடுகளும் இணைந்து வாழும் நாடு. இந்த பன்முகத் தன்மையே நமது நாட்டின் அடையாளம். ஆனால், தீபாவளி பெருநாளை அடுத்துவரும் மேற்கு கலாச்சார விழா ஹலோவின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பிரச்சாரமாக வெளியிடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது,” என்றார்.
சுற்றுலா மலேசியா தனது அதிகாரப்பூர்வ தளத்தில் ‘Nights of Fright 11’ என்ற ஹலோவின் நிகழ்ச்சியை “Bring your nightmares to life” என்ற வாசகத்துடன் பிரசாரம் செய்திருந்தது. இது செப்டம்பர் 26 முதல் நவம்பர் 2 வரை சன்வே லாகூனில் நடைபெறவுள்ளது.
“மலேசிய சுற்றுலா அமைச்சு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கலாம். அதற்காக நமது பண்பாட்டுடன் சம்பந்தமில்லாத மேற்கு கலாச்சாரங்களை ஊக்குவிக்கக் கூடாது,” என்று சிவக்குமார் தெரிவித்தார்.
,“அதே நேரத்தில், தீபாவளி பெருநாள் அக்டோபர் 20 அன்று இந்திய சமூகத்தால் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான சந்தை, சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை சுற்றுலா அமைச்சு முன்னிறுத்தியிருக்கலாம்,” என்றார்.
“Visit Malaysia 2026” பிரச்சாரத்தின் போது 35.6 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருக்கும் நிலையில், மலேசியாவின் சொந்த பண்பாட்டையும் பெருநாளையும் புறக்கணிக்கக் கூடாது. அரசு அமைப்புகளுக்கான விளம்பர வழிகாட்டுதல்கள் (SOP) தெளிவாக இருக்க வேண்டும்,” எனக் கூறினார்.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம், வணிக வளாகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் ஒவ்வொரு இனத்தின் திருவிழாவையும் பிரதிபலிக்கும் அலங்காரம் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்க வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“மலேசியா என்பது மலேசியர்களுக்கே. நமது கலாச்சாரம் நமது பெருமை — அதை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்,” என்று டத்தோ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.