கோலாலம்பூர்:

பெர்னாஸ் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரியன் திட்டம் இந்திய தொழில்முனைவோர்களைப் ஃபிரன்சைஸ் துறையில் வலுப்படுத்தும் தளமாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஃபிரன்சைஸ் வணிகத்தை விரிவுப்படுத்த விரும்பும் வர்த்தகர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மெனாரா பெர்னாஸில் நடைபெற்ற ‘சூரியன்’ திட்ட அறிமுக விழாவில் அவர் கூறினார்.

மேலும், இத்திட்டம் இந்திய சமூகத்திற்கு சம வாய்ப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து சூரியன் திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், வரவு–செலவு திட்டத்தில் இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவிர, அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக ரமணன் குறிப்பிட்டார்.

பெர்னாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘சூரியன்’ திட்டத்தின் கீழ் 20 புதிய பிரான்சைஸ் உரிமையாளர்கள், 100 பிரான்சைஸ் பெறுநர்கள், 400 சிறு தொழில் முனைவோர் மற்றும் 500 வேலைவாய்ப்புகள் என மொத்தம்1,000 பேரை இலக்காக கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தகர்கள் கலந்து கொண்டு, ‘சூரியன்’ திட்டம் குறித்த விரிவான விளக்கத்தை பெற்றனர்.