Homeசமூகம்பாரம்பரிய வேர்களைக் காத்து, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டும் – டத்தோஸ்ரீ...

பாரம்பரிய வேர்களைக் காத்து, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டும் – டத்தோஸ்ரீ எம். சரவணன்

கோலாலம்பூர்:

தீபாவளித் திருநாள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, எதிர்காலத்தை நோக்கி ஆக்கப்பூர்வமாகப் பயணிக்கவும், புதிய நம்பிக்கைகளுடன் சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் அனைவருக்கும் உந்துசக்தியாக அமைய வேண்டும் என ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லங்களில் விளக்கேற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாள், இல்லங்களிலும் உள்ளங்களிலும் அறியாமை இருளை அகற்றி ஞான ஒளியைப் பரப்பும் நாளாக அமைய வேண்டும் என வாழ்த்தினார்.

அறிவியலும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், நமது பாரம்பரிய வேர்களையும் பண்பாட்டையும் பாதுகாப்பதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை இளைய தலைமுறையினரிடம் வளர்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயமாக உருவெடுத்துள்ள நாம், அறிவுசார் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் உலகளாவிய சந்தையில் நமது மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புத்தாக்கத் திறன் ஆகியவற்றிலும் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும். அதன் வழியாக ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தீபாவளித் திருநாள் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் அதேவேளையில், நமது மாண்பு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் மங்கல விழாவாகவும் அமைய வேண்டும் என அவர் வாழ்த்தினார்.

புதிய நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் நிலையான வளர்ச்சியையும் சமூக நல்லிணக்கத்தையும் நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more