பொதுத்தேர்தலில் நஜீப் வெற்றி பெறுவதற்கு ரபிசி வழங்கிய டிப்ஸ்!

0
14

கோலாலம்பூர், நவ. 9-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மக்களின் மனங்களை கவரவும் வெற்றியும் பெறுவதற்கான ஆலோசனையை (டிப்ஸ்) பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி ரம்லி வழங்கியுள்ளார். வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரையில் நஜீப் எண்ணெய்க்கான உதவித்தொகையாக லிட்டருக்கு 0.20 காசு வழங்க வேண்டும்.

டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்கள் மக்களுக்கு சிரமத்தை தரக்கூடிய மாதங்களாகும். பள்ளி தவணை தொடங்குவதால் மாணவர்களுக்கான பள்ளி கட்டணம், புதிய காலணிகளை வாங்குதல் முதலான செலவுகள் மக்களுக்கு இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி எண்ணெய் விலை 4ஆவது முறையாக உயர்ந்துள்ளது. ரோன் 95 எண்ணெய் 0.07 காசு உயர்ந்து ஒரு லிட்டருக்கு 2.31 காசாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, ரோன் 97 எண்ணெய் லிட்டருக்கு 0.06 காசு உயர்ந்து 2.60 காசாக அதிகரித்துள்ளது. டீசலும் 0.03 காசு உயர்ந்து 2.20 காசாக அதிகரித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நஜீப் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து நேற்று உயர்வு கண்ட எண்ணெய் விலைதான் மிக அதிகமானதாகும். நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு, நஜீப் சராசரி வருடாந்திர பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு 27 பில்லியன் என பதிலளித்தார். ஒரு லிட்டருக்கு 0.20 காசு உதவித்தொகையை டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 2018 ஆகிய மாதங்களில் வழங்கினால் அதன் நிதி 90 கோடி வெள்ளியாகும். இது இவ்வாண்டு தொடக்கத்தில் நஜீப் வசுலீத்த உறுதியற்ற வருமானத்தில் குறைந்த 25 விழுக்காடு மட்டுமே. பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தால் மத்திய அரசாங்கத்திற்கு சிரமம் இல்லாமல் அதிக லாபம் கிடைக்கும்.

அரசாங்கத்திற்கும் நிறுவனங்களின் வருமான வரி, பெட்ரோலிய வருமானத்திலிருந்து கிடைக்கும் வரி, தனிநபரின் வருமான வரி முதலானவை அதிகமாக கிடைக்கும். அதோடு, பொருள் மற்றும் சேவை வரிக்கான வசூலிப்பும் மிக அதிகமாக இருக்கும். காரணம், ரோன் 97 மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, அரசாங்கத்திற்கும் அதிக பெட்ரோலியஉரிமம், பெட்ரோனாஸிலிருந்து அதிக லாபம் முதலானவை கிடைக்கும் என ரபிசி ரம்லி கூறினார்.