களத்தில் குதித்த ம.இ.கா. இளைஞர் பிரிவு

பினாங்கு நவ, 9-

பினாங்கு, கெடா மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஇகா இளைஞர் பகுதியினர் களம் இறங்கி தங்களது முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளனர். நிவாரணப்பொருட்கள் வழங்குதல், துப்புரவுப்பணிகளில் ஈடுபடுதல் என நமது இளைஞர்கள் அவர் தம் கடமையினை நிறைவேற்றியுள்ளார்கள்.

மஇகா இளைஞர் பகுதியினரின் இயற்கை பேரழிவு உதவி மையத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர் படை தன்னார்வலர்கள் நிவராணப்பொருட்களோடு கோலாலம்பூரிலிருந்து பினாங்கு மாநிலத்திற்கு புறப்பட்டனர். இதனை அதிகாரப்பூர்வமாக இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மஇகா தேசிய இளைஞர் பகுதி தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக டத்தோ சிவராஜ் சந்திரன், தினாளன் டி.ராஜகோபால் ஆகியோரின் தலைமையில் பினாங்கு மாநில இளைஞர் பகுதி தன்னார்வலர்கள் 100க்கும் மேற்பட்டோரோடு தாமான் பாயான் பகுதிகளில் துப்புரவுப்பணிகளில் ஈடுபட்டனர். இதில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் தினகரன் கலந்து கொண்டிருந்தார். வெள்ள நீர் வடிந்த நிலையிலும் அங்கு சுகாதாரக்கேட்டினை தடுக்கும் வகையில் துப்புரவுப்பணிகளை மேற்கொண்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து கம்போங் மணிஸ் பிறை பகுதி வாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும் தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் ஒரு குழு வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கெடா மாநிலம் தாமான் ஆயர் மெண்டிடே, ரிவர் சைடு பகுதி வாழ் 200 குடும்பங்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கினர். மஇகா இளைஞர் பகுதியினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இது மாதிரியான தொண்டூழிய பணிகளில் ஈடுபடுவது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மஇகா இளைஞர் பகுதியினர் நமது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கின்றனர்.

பினாங்கு மாநில இளைஞர் பகுதி தலைவர் பிரகாஷ், மாநில எஸ்.ஐ.டி.எப் தலைவர் சேதுமணியம், கெடா மாநில இளைஞர் பகுதி தலைவர் தியாகு லட்சுமணன், மாநில எஸ்.ஐ.டி.எப் தலைவர் குமரதேவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து அங்குள்ள பணிகளை மேற்கொண்டனர்.