சுங்கை சிப்புட், ஜூலை 20-

பள்ளி மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினையை களைய அவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார். இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சமூகச் சீர்கேடுகள் அபாயக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனை களைய வேண்டிய அத்தியாவசிய சூழலில் நாம் இருக்கிறோம்.

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட முன்வர வேண்டும். பல்வேறு புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்டும்போது பிற தீய நடவடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் தோன்றாது. நாட்டின் அதிவேக முன்னேற்றத்தில் இன்றைய மாணவர்களுக்கு பல்வேறு சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என நேற்று இங்குள்ள டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற புறப்பாட நடவடிக்கையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.

புறப்பாட நடவடிக்கையின் வழி மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன்வழி அவர்கள் நல்வழியில் பயணிப்பதற்கான தடம் உருவாக்கப்படும். மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள காத்திருக்கும் இன்றைய மாணவர் சமுதாயம் தங்களின் எதிர்காலம் எதுவென்பதை தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப தங்களது செயல்நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் ஹாஜி ரோஸ்லான் பின் முகமட், பள்ளி துணைத் தலைமையாசிரியர் சுந்தரலிங்கம், சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் தாஸ் அந்தோணிசாமி, மாணவர் நல பொறுப்பாசிரியர் நடராஜா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.மகேந்திரன், மக்கள் சக்தி கட்சியின் பேராக் மாநில செயலவையினர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் போலீஸ் படை, தீயணைப்புப் படை, மலேசிய பொது பாதுகாப்பு படை ஆகியவற்றின் கண்காட்சியும், மாணவர்களின் ஏற்பாட்டிலான அங்காடி கடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.