கோலாம்பூர் | பிப்பரவரி 19
கல்வித் துணை அமைச்சரின் அலுவலகம் கொடுத்த அங்கீகாரத்தின்படுயே தமிழ்மொழிக் காப்பகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது என அதன் துணைத் தலைவர் கு, நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ்மொழிக் காப்பகம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அது முந்தைய அரசாங்கத்தின் அமைக்கப்பட்டக் காரணத்தால் நடப்பு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்ப்படாத ஒன்று என கல்வித் துணை அமைச்சரின் சிறாப்பு அதிகாரி குணசீலன் பத்திரிகை செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது மலேசியத் தமிழர்களிடையே பெரும் சினத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஓர் அரசாங்கம் அமைத்த பொது அமைப்பை ஒரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் எப்படி முழுதாக நிராகரிக்க முடியும் என மக்களிடையே கேள்வி எழுந்து வருகிறது.
மலேசியத் தமிழர்களின் அடையாளமாகவும் அவர்களின் சொத்தாகவும் அறுபது ஆண்டுகால விடுதலை வரலாற்றுக்குப் பின்னர் தமிழ் மொழிக்குக் கிடைத்தைப் பெரும் வெற்றியாக மலேசியத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த அமைப்பை இப்படி பேசியிருப்பது பலரது கண்டனத்துக்குள்ளானது.
இது குறித்து அவ்வமைப்பின் துணைத் தலைவர் கு. நாராயண சாமியை அநேகன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,
கல்வித் துணை அமைச்சரின் அலுவலகம் கொடுத்த அங்கீகாரத்தின்படுயே தமிழ்மொழிக் காப்பகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது எனவும், பல திட்டங்கள் வகுத்து முன்னோக்கி இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கென அரசாங்கத்தால் நேரடியாகக் கல்வி அமைச்சின் கீழ் அமைக்கப்பெற்றது தான் மலேசியத் தமிழ் மொழிக் காப்பகம். அமைச்சின் பதவி நெறிமுறை வரிசைப்படி கல்வித் துணை அமைச்சர் தான் அதன் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.
மலேசியாவில் தமிழ் மொழியைத் தழைத்தோங்கச் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக, வரலாற்றில் முதல் முறையாக நாட்டில் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழிக் காப்பகம் அமைக்கப்பட்டது. இதனை அப்போதையக் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.
தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டாது என தியோ நீ சிங் உறுதி அளித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டுகள் தொடங்கி சீனர்களுக்கு என்று சீன மொழி காப்பகம் இருந்து வருகிறது. தற்போது தமிழ்மொழிக்கு அத்தகைய காப்பகம் அமைக்கப்பட்டிருப்பதை மலேசியத் தமிழர்கள் வெகுவாகக் கொண்டாடினார்கள்.
தமிழ் மொழிக் காப்பகத்தின் கீழ், கலைச் சொல் உருவாக்கம், மொழி பெயர்ப்பு, இலக்கணம், இலக்கியம் என நான்கு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்குழுக்களில் அந்தந்த துறைச் சார்ந்த தமிழ் மொழி வல்லுநர்களும், தமிழ் மொழியைச் சார்ந்து கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகளும் இடம்பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



