spot_img
8.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி சீருடை இயக்கத்தின் புத்தாக்கம் : பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் சாதனை தொடர்கின்றது !

சீருடை இயக்கத்தின் புத்தாக்கம் : பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் சாதனை தொடர்கின்றது !

0
838

பண்டார் ஸ்பிரிங்ஹில் | 12/7/2021 :-

புத்தாக்கச் சிந்தனையை விதைத்து மாணவர்களைப் புதியன கண்டுபிடிக்கத் தூண்டும் கல்விதான் இன்றைய உலகின் இன்றியமையாத் தேவையாக இருக்கிறது. எனவே பள்ளிகளின் கல்வித்தரம் என்பது மாணவர்களின் அடைவு நிலையுடன் தொடர்புடையது. இங்கே அடைவு என்பது தேர்வில் பெறும் தேர்ச்சி மட்டும் அல்ல. ஆசியர்களும் மாணவர்களும் கற்றக்கல்வியைக் கொண்டு புத்தாக்கச் சாதனை படைத்தால் அப்பள்ளியின் தரம் உயர்வானது என்று பொருள்.

இன்றையப் பெற்றோர்களில் தரமான கல்வியை வழங்கும் பள்ளிகளை விரும்பி நாடுகின்றனர்.தரமான நகர்ப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குச் சான்று எனலாம்..

தரமான பாடக்கல்வியும் தரமான புறப்பாடக் கல்வியும் வழங்கும் பள்ளிகளுள் போட்டிக்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்பள்ளிக் கூடமும் ஒன்று.

மலேசிய சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்த தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டியில் மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 40 குழுவினர் புத்தாக்கப் போட்டியில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.அவற்றுள் 15 குழுக்கள் மட்டுமே கடந்த 14.06.2021-இல் நடைபெற்ற இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆரம்பப்பள்ளியிலிருந்து 5 குழுக்களும், இடைநிலைப் பள்ளியிலிருந்து 5 குழுக்களும் தலைமைத்துவ பிரிவுக்காக 5 குழுக்களும் தேர்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

அப்போட்டியில் அப்பள்ளியின் ஆசிரியர்கள், தஙகம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். மேலும் ‘ஆசிரியர் தலைமைத்துவம்’ எனும் பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் நிலை வெற்றியாளராகப் பல பள்ளிகளைத் தோற்கடித்து வாகை சூடியுள்ளனர்.

இது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ள ஒரு நிகழ்வாகும்.

இப்பள்ளியின் இந்த சாதனைக்கு முதுகெலும்பாய் இருந்து செயல்பட்டவர் அப்பள்ளியின் ஆசிரியர் திரு. குகனேசுவரன் தமிழ்மணி, நெகிரி செம்பிலான் மாநில சாரணர் இயக்கத்தின் துணை அணையராகவும் கூட.

திரு.குகனேஸ்வரன் தமிழ்மணி அவர்களின் தலைமையில் திருமதி.ஆனந்தி (பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், போர்ட்டிக்சன்), திரு.கா.பார்த்திபன், திரு.வி.பாலன், திருமதி கு.சுமதி, திருமதி பெ.சரஸ்வதி, திருமதி கி.லோகராணி, திருமதி இரா.நித்யவதி, திருமதி கு.லோகேஸ்வரி, திருமதி க.வனிதா மற்றும் திருமதி மா.சுமிதா (போர்ட்டிக்சன் குழு 61 – SJKT BANDAR SPRINGHILL)ஆகியோரின் முழு முயற்சியினாலும் புத்தாக்கச் சிந்தனையினாலும் இப்போட்டியில் தங்க விருதை வென்று நெகிரி செம்பிலான் மாநில சாரணர் இயக்கம் மட்டுமின்றி பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் பெருமையையும் நிலைநாட்டியுள்ளனர்.

இவர்கள் பல மின்னியல் வசதிகள் நிறைந்த ‘மின்னியல் விவேக அட்டை’-ஐ உருவமைத்துச் சாதனை புரிந்துள்ளனர்.

இவர்களின் இந்த முயற்சி, புறப்பாடத்திலும் புத்தாக்கம் செய்யும் ஆர்வம், தமிழ்ப்பள்ளிகளின் ஏற்றத்திற்கு உதவுகிறது என்பதால் இந்தக் கட்டுரை புறப்பாட நடவடிக்கையின் அவசியத்தைப் பற்றியும் பள்ளிகள் தேர்வு செய்ய வேண்டிய சரியான புறப்பாட நடவடிக்கை எது, அது எப்படி மாணவர்க்குப் பலவகையில் உதவும் என்பதை விவரிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறது.


மேலும் இக்கட்டுரை மலேசிய சாரணர் இயக்கம் பாடம், புறப்பாடம் ஆகிய இவ்விரண்டிலும் புத்தாக்கம் செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மாணவரிடத்தில் முன்னெடுக்கிறது என்பதை விவரிக்கிறது.

மலேசியக் கல்விப் பெருந்திட்டம் நமது மாணவர்கள் அறிவார்ந்தவராகவும் புத்தாக்கம் செய்யும் ஆற்றல் உள்ளவராகவும், நாட்டை உயர்வருமானம் பெறும் நாடாக உருமாற்றுவதில் பங்களிப்பு செய்யக்கூடியவராகவும் இருக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருக்கின்றது.

அதற்கு அடிப்படையாக
1. பல்வேறு அறிவுத்துறைகளை அவர்கள் கற்றுத் தெளிந்திருக்க வேண்டும்.
2. பன்மொழி ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்
3. தலைமைத்துவ ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டும்
4. சிந்தனைத் திறன் மிகுந்தவராக இருக்க வேண்டும். அதைக்கொண்டு சிறந்த முடிவுகளையும் சிக்கல்களைந்து புத்தாக்கத்தையும் படைக்க வேண்டும்
5. நன்னெறியையும் ஆன்மீகத்தையும் பின்பற்ற வேண்டும்
6. நாட்டின்மேல் பற்று கொண்டு தேசிய அடையாளத்தைப் பேண வேண்டும்.

இந்த ஆறு கூறுகளையும் மாணவரிடத்தில் ஒருங்கே வளர்த்தெடுக்க உதவும் புறப்பாட நடவடிக்கைதான் சாரணர் இயக்க நடவடிக்கை.

சாரணம் இயக்கம் மற்ற இயக்கம் போலல்லாது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே புகழ்பரப்பி வரும் இயக்கம். நமது பேரரசரின் அங்கீகாரம் பெற்ற இயக்கமாக இருப்பதால் இதிலே ஒருவர் அரசச் சாரணர் (king’s scout ) எனும் உயரிய அங்கீகாரத்தை பெறலாம்.அதற்கு இனமோ, மொழியோ மதமோ ஒரு தடையில்லை.

சாரணர் இயக்க உறுப்பினர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தத்துவத்தைக் கடைபிடிப்பதால் ஒருவர் இன்னொருவரின் கலை கலாச்சார பண்பாட்டை அறிந்திருக்கவும் மதிக்கவும் வலியுறுத்தப்படுவர்.

பன்மொழிகளை அறிந்திருக்க ஊக்குவிக்கப்படுவர். நேர்த்தியாக அணிவகுப்பு செய்யவும் கட்டளைக்கு கீழ்படியவும் படிப்படியாகப் பயிற்றுவிக்கப்படுவர்.
பண்பாகவும் நெறியோடும் அதே நேரத்தில் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் உதவத் தயாராக இருப்பர்.

உதவும் மனப்பான்மையை வளர்க்க அவர்கள் திட்டங்கள் தீட்டவும் அதை முறையாக செயல்படுத்தவும் பழக்கப் படுத்தப்படுவார்கள்.
பொறுப்புள்ளக் குடிமகனாகத் திகழ சாரணர் இயக்கம் பல்வேறு பயிற்சிகளை வழஙகும்.


பேரிடர் நிகழும்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனையும் பிறருக்கு உதவிகள் வழங்க வேண்டியத் திறனையும் சாரணர் இயக்கும் கற்பிக்கும்.

சுயமாக சமைப்பது, வீடு அல்லது கூடாரம் அமைப்பது, உணவை வீணாக்காது இருப்பது, நீர், காற்று, மண் போன்ற சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாப்பது இப்படி எண்ணற்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட இவ்வியக்கம் வலியுறுத்துகிறது.

சாரணர் இயக்கம் வலியுறுத்தம் முழக்கம்:

ஒருமுறை சாரணர் ஆகி விட்டால் வாழும் வரை சாரணரே!

மதம் இனம் மொழி நிறம் கடந்து பிறருக்குத் தொண்டாற்றத் தயாராக எப்போதும் இருக்க வேண்டும். உறுதியாகத் தொண்டு செய்யத் துணிபவனே சிறந்த தலைவனாகவும் விளஙக முடியும்.


“சாரணர் விதிகளை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும். தற்கட்டுப்பாடு, ஒற்றுமை, தன்னை நிருவகித்தல், ஒழுங்கு, நேர்த்தி, சுற்றுச்சூழல் தூய்மை, சுகாதாரம், பொது பாதுகாப்பு என பலதுறை பங்களிப்பைச் செய்யும் பேரியக்கம் , உலகின் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட இயக்கம், உலக ஜம்போரி ( world jambori) எனும் பன்னாட்டுச் சாரணர் இயக்க நிகராளிகளுக்குச் சந்திப்பினைப் பெரிய அளவில் கட்டுக்கோப்பாக மிகவும் வண்ணமயமாக நடத்தும் இயக்கம் இந்த சாரணர் இயக்கம்” இப்படிக் கூறுகின்றார் நெகிரி செம்பிலான் மாநில சாரணர் இயக்கத்தின் துணை ஆணையர் மற்றும் பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் சாரணர் இயக்க தலைவர் திரு .குகனேஸ்வரன் தமிழ்மணி.

மாந்தநேயம், உலக ஒற்றுமை, இயற்கைவளஙகளைப் பாதுகாத்தல் என பல கோணஙகளில் சாரணர் இயக்க உறுப்பினர்கள் சிந்திப்பார்கள்.

ஐக்கிய நாடுகளின் (united nations) அவை , உலகின் பொதுநலம் கருதி, இயற்கைவளப் பாதுகாப்பு நிலையான சமூக பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முதன்மை கொடுத்து 17 வளர்ச்சி இலக்குகளை ( sustainable development goals, SDG) அறிமுகம் செய்துள்ளது. பள்ளிக்கூடங்களும் உயர்கல்வி நிலையங்களும் இந்த 17 இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடம் மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப் பரிந்துரைத்துள்ளது.மலேசிய அரசாங்கமும் அதை வரவேற்று ஒப்பம் தெரிவித்துள்ளது.

மலேசிய சாரணர் இயக்கமும் அந்த 17 இலக்குகளைப் புறப்பாட நடவடிக்கைகளில் இணைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவை வீணாக்குதலை தவிர்க்கும் செயல்கள், வறுமைக்கு எதிரான முன்னெடுப்புகள், காடுகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்களால் உண்டாகும் கழிவுகளை அகற்றுதல், அதன் பயன்பாட்டை தவிர்த்தல் இப்படி பலவகையான இலக்குகளை சாரணர் இயக்கம் தன் நடவடிக்கைகளில் இணைத்துள்ளது.

ஆரம்ப பள்ளியில் சாரணர் இயக்கத்தில் பங்குப்பெற்று இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் நம்மின மாணவர்கள் அவர்கள் கற்றப் பல திறன்களை மேலும் மெருகேற்ற இடைநிலைப் பள்ளியிலும் சாரணராகத் தொடரலாம். அங்கு பல்லின மாணவர்கள் இவர்களுடன் நட்போடு பழகுவார்கள். நன்மதிப்பும் தருவார்கள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சாரணர் இயக்கமும்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடையே ஒழுங்கும் நற்பண்பும் சிறந்து விளங்க இந்தச் சாரணர் இயக்கம் பெரும் பங்காற்றும் என்பதில் துளியும் ஐயமில்லை.

சாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் மனிதரே எனும் மனிதநேயத்தை ஊட்டி மாணவருக்கு நல்வழிக்காட்டும் இந்த சாரணர் இயக்கம்.

மலேசியாப் போன்றப் பல்லினம் கொண்ட நாட்டில் பிற இனத்தவரை நேசித்து ஒன்றுபடுவது அவசியமானது. பல இன மாணவர்களுடன் சமைத்துச் சேர்ந்து உண்ணுவது, காடுகளில் கூடாரம் அமைத்து வாழும் கலை கற்பது, பேரிடர் நேரத்தில் கூட்டாகச் செயல்படுவது, மலாய்மொழி ஆங்கில மொழிக் கற்றுக்கொள்வது என மனிதரிடையே ஐக்கியத்தை வளர்க்கும் இந்த சாரணர் இயக்கம்.

கோறனி பெருந்தொற்று ஏற்படுத்திய மாற்றம் இந்தப் புதிய வழமைக் காலகட்டத்தில் மாணவருக்குப் பல போட்டிகளையும் ( தேசிய அளவில்) இயங்கலையில் நடத்துகிறது சாரணர் இயக்கம்.

புறப்பாட நடவடிக்கைகளிலும் புத்தாக்கம் செய்விக்கும் திறனை இவ்வியக்கம் மாணவரைப் பழக்குகிறது.

சாரணர் இயக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் திறனையும் அல்லது சாரணர் இயக்கம் பற்றி மேல் விவரங்கள் அறியத் தொடர்பு கொள்க: 60124634171 குகனேசுவரன் தமிழ்மணி.