சென்னை, ஜூலை.25 –
பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அடுத்தவர்களை குறை சொல்லாமல் இருப்பவர் ஓவியா. அதனாலேயே அவரை பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
நிகழ்ச்சி துவங்கிய புதிதில் அவர் கேமரா முன்பு வந்து நின்று வாழைப்பழம் கேட்டதை வைத்து மீம்ஸ் போட்டவர்கள் கூட தற்போது ஓவியா ஆர்மியில் சேர்ந்துவிட்டனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியை திரையுலகை சேர்ந்தவர்களும் பார்த்து வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தில் ஓவியா நடிப்பதாக இருந்தது. ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
சீதக்காதி படத்தில் பார்வதி நாயர் தவிர்த்து ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இருவருமே ஏற்கனவே விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீதக்காதி பட வாய்ப்பு கைநழுவியதை பார்த்து ஓவியாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் அவருக்கு பல பட வாய்ப்புகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.