பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசமாக சவப்பெட்டி வழங்கப்படுமென பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி கூறியதாக நேற்று இணையத்தளத்தில் செய்தி வெளியானது.
இந்த செய்தி வைரலானதால், இந்தியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். எதிர்க்கட்சிகள் இதனை தங்களின் துருப்புச் சீட்டாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பாகான் டத்தோ நாடாளுமன்றத்தின் கீழ் ருங்குப் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதிகள் உண்டு. பாகான் டத்தோவை பொறுத்தவரையில் 55 விடுக்காடு மலாய் வாக்காளர்கள். அவர்களுக்கு அடுத்து 24 விடுக்காடு இந்திய வாக்காளர்கள் ஆவர். இத்தொகுதியில் சீன வாக்காளர்கள் 20 விழுக்காடு மட்டும்தான்.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியை 2,108 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி கைப்பற்றினார். ருங்குப் சட்டமன்றத் தொகுதியில் அம்னோ சார்பில் போட்டியிட்ட ஷாருல் ஸாமன் 613 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சுப்ரமணியம் 1,240 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
இம்முறை ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியை அம்னோ எடுத்து கொண்டது. அதற்கு பதிலாக சுங்கை சட்டமன்றத் தொகுதியை மீண்டும் மஇகாவிடம் வழங்கியுள்ளது. மலாய்க்காரர்களுக்கு அடுத்த பெரிய அளவில் இந்திய வாக்காளர்கள் இருக்கும் பாகான் டத்தோ தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதியில் இந்தியருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
நாட்டின் துணைப் பிரதமர் தமது நாடாளுமன்றத்தின் கீழ் இருக்கும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய வேட்பாளரின் வெற்றிக்கு உதவ முடியாமல், மலாய்க்காரரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இச்சூழ்நிலையில் இந்தியர்களுக்கு அவர் என்ன செய்துவிடப் போகிறார் என எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டார்கள்.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக இந்திய வாக்காளர்களை கவர ஏதாவது நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென்று பாகான் டத்தோ இந்தியர்களுக்கான சிறப்பு செயல் திட்ட அறிக்கையை டத்தோஸ்ரீ ஸாஹிட் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
இதில் பாகான் டத்தோவில் உள்ள இந்தியர்கள் இறந்து விட்டால். அவர்களின் முழு செலவையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 6 மாதங்களுக்கு முன்னமே அவர் மக்களிடம் நேரடியாக அறிவித்தும் உள்ளார்.
குறிப்பாக சவப்பெட்டி உட்பட இறுதி சடங்கிற்கான செலவுகளும், குறிப்பாக சவ வண்டி, தகனம் செய்வதற்கான கட்டணம் அனைத்தையும் தாமே ஏற்றுக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் பாகான் டத்தோவின் டத்தோஸ்ரீ ஸாஹிட்டிற்கு இந்திய வாக்குகளை பெற்றுத் தரும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக சேவை மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் தமது சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் குறித்து சில கருத்துகளை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் இலவச சவப்பெட்டியும் அடங்கும்.
அதை மையமாகக் கொண்டு பாகான் டத்தோவில் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு சவப்பெட்டி என்ற செய்தி வெளியானது. இதனால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்தார்க்ள். தற்போது டத்தோஸ்ரீ ஸாஹிட் பாகான் டத்தோ இந்தியர்களுக்காக எம்மாதிரியான செயல் திட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறார் என்பதற்காக அவரின் இந்தியர்களுக்கான செயல் திட்ட அறிக்கைக்காக பாகான் டத்தோ மக்கள் காத்திருக்கிறார்கள்.