கோலாலம்பூர், ஏப் 27-

மைபிபிபி கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ கேவியஸ் நீக்கப்பட்டுள்ளார். அவர் பக்காத்தான் ஹராப்பானில் இணையலாம். அதோடு கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடக்கூடுமென்றும் ஆரூடங்கள் வலுக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீர், டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் டான்ஸ்ரீ கேவியஸ் உள்ள நிழல்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுகின்றது.

அவர் பக்காத்தான் ஹராப்பானில் இணைந்து விட்டதாகவும், தேசிய முன்னணிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடுவார் என்றும் பலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால் அந்த நிழல்படம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியில் துன் மகாதீரை சந்தித்தபோது எடுத்துக் கொண்டது. அதை இப்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பி வருகிறார்கள்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும், இதுவரையில் டான்ஸ்ரீ கேவியஸ் தமது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு என்ன காரணத்திற்காக தம்மை கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்பதை அவர் மைபிபிபி கட்சியின் உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.