கோலாலம்பூர், ஏப். 27-

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்கள் தேசிய முன்னணி வசம் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அமைச்சரவையில் சீன சமூகத்தை பிரதிநிதிக்க ஆள் இல்லாமல் போகலாம் என்ற பராமறிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் சீன சமூகத்தை பிரதிநிதிக்க ஒருசில பேர் அல்லது ஆளே இல்லாமல் போனால் அது வருத்தமான ஒன்றாகும். 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் மற்றும் அதன் சீன சமூகத்தை பிரதிநிதிப்பவர்களை புறக்கணிக்கும் சீன சமூக வாக்காளர்களுக்கு அவர் இதனை நினைவுத்தப்படுத்தினார்.

தேசிய முன்னணி வேட்பாளர்களை சீன சமூக வாக்காளர்கள் புறக்கணித்து, மற்றவர்களுக்கு வாக்களித்தால் தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் அமைக்கப்படும் அமைச்சரவையில் சீன சமூக தலைவர்களுக்கு இடம் இருக்காது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

அமைச்சரவையில் வலுவான சீன சமூக பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இந்நிலையில் சீன சமுதாயத்தை பிரதிநிதிக்கும் தலைவர்களை நாம் புறக்கணித்தால், அது அமைச்சரவையில் பலவீனத்தை கொண்டு வரும் என நேற்று 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு முன் நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும். அதன் பிறகு அமைச்சரவையில் சீனர்களை பிரதிநிதிக்கும் தலைவர்கள் இடம்பெறுவார்கள். அதனை கவனத்தில் கொண்டு சீனர்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் செய்த தவறை இம்முறையும் சீன வாக்காளர்கள் செய்யக்கூடாது என டத்தோஸ்ரீ நஜீப் ஆலோசனை வழங்கினார்.

நாட்டின் நிலைத்தன்மை, பொருளாதார மேம்பாடு, புதிய வர்த்தக வாய்ப்புகள், நிதி உதவி என அனைத்திலும் மேம்பாடு கண்ட தேசிய முன்னணி அரசாங்கத்தை சீனர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சியினர் தேசிய முன்னணி போல் செயல்பட முடியாது. அதனால் மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என டத்தோஸ்ரீ நஜீப் கேட்டுக் கொண்டார்.