கோலாலம்பூர், ஏப். 29-

பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் போஸ்டருக்கு தேசிய முன்னணியின் 2 ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

சிறந்த இலக்கை நோக்கி மலேசியா பயணிக்கின்றது!!! நாட்டின் பிரதமர் நஜீப் என்ற முழக்கத்துடன் நஜீப் போஸ்டர் மீது இருவர் பாலை ஊற்றுகிறார்கள். அதன் பிறகு பாரிசன் நேஷனல் என்றும் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். அதன் பிறகு பட்டாசுகளை கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக இந்த விடீயோவை பலர் தங்களின் பக்கத்தில் பகிர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில்தான் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வாடிக்கையாக இருக்கின்றது. இதை வன்மையாகக் கண்டிக்கும் மலேசியாவிலும் இது தேவைதானா? என பலர் தங்களின் ஆதங்கங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தமது ஆட்சிக்காலத்தில் இந்தியர்களுக்கு பல நலத்திட்டங்களையும் சேவைகளையும் டத்தோஸ்ரீ நஜீப் செய்திருந்தால், அதை இம்மாதிரியான நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடாது என ஒருவர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

உயரமாக இருக்கும் அந்த போஸ்டர் கம்பத்தின் மீது ஏறி இம்மாதிரியான நடடிக்கைகளில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தாக முடியுமென்றும் பலர் எச்சரித்துள்ளார்கள். குறிப்பாக இம்மாதிரியான நடவடிக்கைகள் தேசிய முன்னணிக்கு பாதகமாக அமையலாம் என்றும் பலர் கூறியுள்ளார்கள்.

இது எங்கு நடந்தது? எந்தக் கட்சியை சார்ந்தவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்பதற்கு இன்னமும் தெளிவான பதிலில்லை. ஆனால் இதை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.