தஞ்சோங் மாலிம், ஏப்.  29-

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் தலைமையில் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். சனிக்கிழமை இரவு நடந்த இந்த நிகழ்ச்சி அங்குள்ள குடியிருப்பாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சிலிம் ரீவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை மக்கள் சக்தி கட்சியின் தொகுதித் தலைவர் எஸ்.கே. ராவ், ஆலயத் தலைவர் விஜயகுமார், ஆலய உறுப்பினர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் பேரா மாநில மசீச தலைவர் டத்தோ டாக்டர் மா ஆங் சூன், சிலிம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான டத்தோ முகமட் குசைரி, பேராங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோ ஹஜா ருஸ்னா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அதோடு மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் சுதாகர் சுப்ரமணியம், இளைஞர் பிரிவுத் தலைவர் மணிமாறன் ஆறுமுகம், இளைஞர் பிரிவின் செயலாளர் திவ்யாதிரன், கட்சியின் சிலாங்கூர் மாநில உதவித் தலைவர் கணேஷ் உட்பட மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலான அளவில் கலந்து கொண்டார்கள்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் தஞ்சோங் மாலிம் தொகுதியில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய நாம் அனைவரும் வேட்பாளர்களுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டுமென மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

ஆதரவு வழங்குவது மட்டுமின்றி, தேர்தல் நடவடிக்கைக்குழு வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், வெற்றி பெறுவது கடினமாகிவிடுமென்றும் அறிவுறுத்தினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

நிலையான அரசு அமைந்தால் மக்களுக்கான தேவைகளை எளிதாக முன்னெடுப்பதற்கு சுலபமாக அமையுமென இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.