மைபிபிபிக்கு நானே தலைவர்! உயர்மட்ட பதவிகளில் மாற்றம்! டான்ஸ்ரீ கேவியஸ் (அநேகனின் சிறப்பு நேர்காணல்)

மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக உச்சமன்றத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தும் இதுவரையில் எந்த பதிலும் இல்லை. அதனால் அக்கடிதத்தை மீட்டுக்கொள்வதாகவும் தாமே மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என டான்ஸ்ரீ கேவியஸ் உறுதிப்படுத்தினார்.

கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களை மிரட்டுவது போல என்னையும் மிரட்ட நினைப்பவர்களுக்கு அரசியல் பகடி வதை தேவையில்லை என்பதை நினைவுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தம்மை நீக்கியது எந்த வகையிலும் செல்லாது என்றும், கட்சியின் விதிமுறைகளை முதலில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மைபிபிபி விவகாரம் தொடர்பில் அநேகன் ஆசிரியர் குழு அவரை தொடர்பு கொண்டது. இந்நிலையில் இன்று தாம் சார்ந்த விளக்கத்தை வழங்க அவர் முன்வந்தார்.

அநேகன் : கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து உறுப்பினர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கேவியஸ் : மைபிபிபி கட்சியின் சட்டவிதிப்படி 9.13இன் கீழ் கட்சியின் உச்சமன்றம் தேசிய தலைவரை நீக்க முடியாது. மாறாக உச்சமன்றம் எடுக்கும் முடிவு கட்சியின் பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்டு அதனை கட்சியின் உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது செல்லுபடியாகும். மாறாக கட்சியின் கட்டொழுங்கு பிரிவு தலைவராக இருக்கும் டத்தோ மெக்லின் டிகுருஸ்சை பதவியில் நியமித்தது நான்தான்.

கட்டொழுங்கு பிரிவு என்பது ஒருவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உச்ச மன்றத்திற்கு கொண்டு வருவது மட்டும்தான். அவரை நீக்கும் அதிகாரம் உச்சமன்றத்திற்கு தான் உண்டு. ஆனால் அதுவே கட்சியின் தேசியத் தலைவர் என்றால் உச்ச மன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. அது பேராளர் மாநாட்டில் பொறுத்தது.

முன்னதாக மைபிபிபி கட்சியின் சட்டவிதி 6.9இன் கீழ் கட்சி ஒருவர் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் கட்சியின் உறுப்பினர்தான் அந்த புகாரை வழங்கியிருக்க வேண்டும் மாறாக தேசிய முன்னணி வழங்கிய கடிதத்தை வைத்து என் மீது நடவடிக்கை எடுத்தது கட்சியின் விதிமுறையை மீறியுள்ளதை காட்டுகிறது.

அநேகன் : கட்சியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டது எப்போது தெரியும்?

கேவியஸ்: கட்சியிலிருந்து என்னை நீக்கி விட்டதற்கான எந்த கடிதத்தையும் நான் பெறவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்படும் ஒருவர் 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். ஆனால் இவர்கள் இன்னமும் கடிதத்தை வழங்காமல் இருக்கிறார்கள். நான் கொடுத்த கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லை என்பதால் அக்கடிதத்தை மீட்டுக் கொள்கிறேன்.

முன்னதாக ஏப்ரல் 23ஆம் தேதி கட்சியின் அனைத்து பதவியிலிருந்து விலகுவதாக நான் தெரிவித்து விட்டேன். ஆனால் 25ஆம் தேதி புத்ரா ஜெயாவில் தாம் இருந்த போது தம்மை உச்சமன்றம் நீக்குவதாக செய்தி கிடைத்தது. உடனே, கட்சியின் பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டேன்.

அவரிடம் எனது விலகல் கடிதத்தை சமர்ப்பித்து விட்டதாகவும் கூறினேன். அவர் செய்தியாளர் கூட்டத்தில் நான் சமர்ப்பித்த கடிதம் குறித்து பேசுவார் என்று நினைத்த போது கட்சியில் இருந்து என்னை நீக்கி விட்டதாக கூறுகிறார். இதன் நோக்கம் என்ன?

கட்சியின் முதல் உறுப்பினர் நான். என்னை கட்சியிலிருந்து நீக்கா விட்டால் கட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பதை கருதிதான் அடிப்படை உறுப்பினர் என்ற அடையாளத்தையும் பறிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அநேகன் : கட்சி பதவிகளில் மாற்றம் உண்டா?

கேவியஸ்: கட்சியின் நலன் கருதி தம்மை எதிர்த்த யாரையும் நீக்க வில்லை. ஆனால் முதன்மை உதவித் தலைவர் பதவியிலிருந்து டத்தோ மெக்லின் டிகுருஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டத்தோஸ்ரீ காந்தி முத்துசாமி அப்பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்.

இதனிடையே கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த டத்தோ மோகன் கந்தசாமி பதிலாக துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ சைமன் சபாபதி, இனி தலைமைச் செயலாளராக செயலாற்றவும் தாம் கடிதம் வழங்கியுள்ளேன். இந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் வேறொரு செயலாளரை நியமிக்கும் அதிகாரம் தலைவராகிய எனக்கு உண்டு.

அநேகன் : மைபிபிபி தலைமையகம் யாருடையது?

கேவியஸ் : தற்போது மைபிபிபி தலைமையகம் செயல்படும் கட்டடம் எனக்கு சொந்தமானது. இந்த கட்டடத்தை வாங்குவதற்கு 26 லட்சம் வெள்ளியை கடனாக பெற்றேன். இந்த கட்டடத்தை வாங்குவதற்கு கட்சியிலிருந்து 80 ஆயிரம் வெள்ளி தான் பயன்படுத்தப்பட்டது. அதை மீண்டும் கட்சிக்கு ஒப்படைக்க தயார்.

அநேகன் : தொகுதி பங்கீட்டில் உண்மையில் நடந்தது என்ன ?

கேவியஸ் : மைபிபிபி கட்சியை பொறுத்தவரை கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதிக்காக உச்சமன்றத்தின் அனுமதியின்றி இதர தொகுதிகளை தாம் விட்டுக்கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பிப்ரவரி 15ஆம் தேதி நடந்த மைபிபிபி உச்சமன்ற கூட்டத்தில் கேமரன் மலை, நிபோங் தெபால் நாடாளுமன்ற தொகுதிகளை மைபிபிபி கேட்டது. குறிப்பாக நிபோங் தெபால் நாடாளுமன்ற தொகுதியில் தம்மால் வெற்றி பெற முடியும் என டத்தோ லோக பாலமோகன் கூறியிருந்தார்.

அதேபோல் டத்தோ மெக்லின் டிகுருஸ்க்காக கோத்தா அலாம் ஷா சட்டமன்றத் தொகுதி, டத்தோ நரேன் சிங்குகாக புந்தோங் சட்டமன்றத் தொகுதி, ஹோங் சி கியாங்கிற்காக கோபெங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட தேஜா சட்டமன்றத் தொகுதி , டாக்டர் சிவாவிற்கு பாலோக் சட்டமன்றத் தொகுதி, சியூ தியாங் சாய், டத்தோ கில்பர்ட் ஆகியோருக்காக கோத்தா லக்சமணா தொகுதி, டத்தோ நிக்கிற்காக மாணிக் சட்டமன்றத் தொகுதி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என தேசிய முன்னணியிடம் கோரிக்கை வைத்தோம்.

பின்னர் நிபோங் தெபால் நாடாளுமன்ற தொகுதிக்கு பதிலாக பத்துகாவான் நாடாளுமன்றத்தில் போட்டியிட விரும்புவதாக டத்தோ லோகபால மோகன் கூறினார். தேஜா தொகுதியை ம.சீ.ச. உறுதி செய்த வேளையில் கோத்தா அலாம் ஷா தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லையென மெக்லின் டிகுருஸ் கூறினார்.

அதேபோல் பாலோக் சட்டமன்றத் தொகுதியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக செனட்டர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக டாக்டர் சிவா கூறினார். அதனால் அவருக்கான ஆதரவு கடிதத்தையும் மைபிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் வழங்கினேன். இந்நிலையில் கோத்தா லக்சமணா தொகுதியும் மறுக்கப்பட்டது.

மைபிபிபி உச்சமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை கேவியஸ் காட்டுகிறார்

அநேகன் : அதன் பிறகு மைபிபிபி உச்சமன்றம் என்ன செய்தது?

கேவியஸ் : ஏப்ரல் 3ஆம் தேதி உச்சமன்றம் கூடி நாடாளுமன்றம் களைக்கப்படுவதற்கு முன் கட்சிக்காக கேமரன்மலை, புந்தோங் சட்டமன்ற தொகுதியை கேட்டோம்.

கேவியஸ் : இந்நிலையில் புந்தோங் தொகுதி குறித்து மாநில மந்திரி புசாரின் பிரதிநிதியிடம் பேச்சு நடத்தினோம். புந்தோங்கை கொடுக்க வாய்ப்பே இல்லையென அவர் கூறினார். குறிப்பாக ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற தொகுதியை அம்னோவிடம் ஒப்படைத்து விட்டதால் புந்தோங்கையும் கேட்க முடியாது என அவர் உறுதியாக கூறினார். அதோடு புந்தோங்கில் மைபிபிபி செய்த சேவைக்காக ஆலோசகர் அல்லது ஜி.எல்.சி. பதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே ஏப்ரல் 7ஆம் தேதி நாடாளுமன்றம் களைக்கப்பட்டது. தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் இறுதியாக கேமரன் மலை தொகுதியாவது வழங்குங்கள் என கூறினோம். இப்படி முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் உச்சமன்றம் அறியும். இதில் தெரியாது என்ற சொல்லுக்கே இடம் இல்லை!

அநேகன் : கட்சியிலிருந்து விலகுவதாக எப்போது முடிவு செய்தீர்கள்?

கேவியஸ் : ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த மைபிபியின் உச்சமன்ற கூட்டத்தில் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். ஆனால் அதை டத்தோ மெக்லின் டிகுருஸ், டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ லோகபால மோகன் என யாருமே ஏற்றுக்கொள்ள வில்லை. செய்தியாளர் கூட்டத்தில் நான் விலகியதையும் தெரிவிக்குமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அதை மறுத்து விட்டனர்.

ஆனால் திடீரென உச்சமன்றத்தை கூட்டி தம்மை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. 1996ஆம் ஆண்டு 10 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் மைபிபிபி கட்சிக்கான சட்டவிதிமுறைகளை உருவாக்கினார்கள். அந்த குழுவில் நானும் இருந்தேன்.

அநேகன் : தேசிய முன்னணிக்கு எதிராக செயல்பட்டதாக செய்திகள் கசிகின்றன? அதற்கு என்ன காரணம்?

கேவியஸ்: தொகுதி பங்கீட்டில் மனநிறைவு இல்லாததால், இத்தனை ஆண்டு காலம் உழைத்ததை எண்ணி கோபம் வந்தது. ஆனால் தேசிய முன்னணியிலிருந்து விலக வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் நானும் தேசிய முன்னணி ஆதரவாளர்தான். 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்காக உழைப்பேன்.

அநேகன் : சிகாம்புட் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை?

கேவியஸ்: சிகாம்புட் தொகுதியில் மைபிபிபி கட்சி இதுவரையில் பெரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது கிடையாது. அந்த தொகுதியில் டத்தோ லோக பால போட்டியிடுவதுதான் சரியானது. கடந்த 5 ஆண்டுகாலமாக கூட்டரசு பிரதேச துணையமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். அந்த அடிப்படையில் அவர் சிகாம்புட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அநேகன் : குழப்பத்தில் இருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கேவியஸ்: கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடையவேண்டிய அவசியம் இல்லை. சிலர் என்னை தொடர்பு கொண்டு கண்ணீர் சிந்தினார்கள். இந்த பிரச்னைக்கு நம்மால் எளிதாக தீர்வு காணமுடியும். யாருடனும் பகைமையை வளர்த்துக்கொள்ள நான் தயாராக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் நேரிடையாக என்னை அணுகி பேசலாம். அப்படி பேசத் தவறி இந்த விவகாரத்தை திசை திருப்பினால் சங்க பதிவு இலாகா இந்த விவகாரத்தில் சம்பந்தப்படும்.

அப்படி நடந்து கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட்டால் தேசிய முன்னணியின் சலுகைகள் நமக்கு மறுக்கப்படலாம். அதோடு பதிவு ரத்தாகும் அபாயமும் உள்ளது என்பதை டான்ஸ்ரீ கேவியஸ் சுட்டிக்காட்டினார். அதனால் அரசியல் சுயநலத்திற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பவர்கள் அதனை நிறுத்திக் கொண்டு கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.