புத்ரா ஜெயா, ஜூலை 5-

அம்னோவிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானம் இருந்தால் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய அப்பதவியிலிருந்து விலக வேண்டுமென அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி சவால் விடுத்தார்.

கட்சியிலிருந்து விலகுவதாக கூறியவர்கள் இதற்கு முன்பு தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள். அதனால், அவர்கள் அனைவரும் பதவியிலிருந்து விலகினால் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்ட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த ஆளுமையின் கீழ் வெற்றி பெறவில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டிருக்கிறோம்.

நான் இதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும் என புதன்கிழமை அம்னோ தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அம்னோவின் முன்னாள் புத்ரி தலைவி டத்தோ மாஸ் எர்மியாத்தியைச் சுட்டிக்காட்டி டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி கூறினார்.