புத்ராஜெயா, நவ.11
தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு அடித்தளம் என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலக அமைதி தினத்தை முன்னிட்டு இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் முதலாம் உலகப் போர் முடிவு பெற்றதுடன் உலகம் இனி அமைதி வழியை நாட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நூற்றாண்டு கால உலக வரலாற்றைக் கொண்ட ‘உலக அமைதி நாள் பன்னாட்டு அளவில் கொண்டாடப்படுவதன் தொடர்பில் புத்ராஜெயா, ‘வெட்லேண்ட்ஸ் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், அரசு சாரா அமைப்பினர், சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மலேசியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உலகின் முக்கியமான சமயங்களின் வழிபாடு இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மலேசிய மக்களின் பன்முகத் தன்மை ஒருசேர வெளிப்படும் வகையில் தேச ஒற்றுமையையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி குழுமியுள்ள மலேசிய அன்பர்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சர் என்னும் வகையில் கலந்து கொள்வது பெருமைக்குரியது என்றார் அவர்.

ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் அமைதிக்கான விதை ஊன்றப் பட வேண்டும்.பின்னர் அது, தேச அளவிலும் உலக அளவிலும் கிளைவிட்டு ஆல்போல் செழிக்க வேண்டும். இதன் அடிப்படையில்-தான் ஒவ்வொரு மனிதரும் அன்றாடம் காலை 11:11 மணிக்கு மௌனம் அனுசரித்து உலக அமைதிக்காக ஒரு நிமிடத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று உலக அமைதிக்கான அமைப்பின் மலேசியக் கிளை சார்பில் வலியுறுத்தப்படுகிறது. மலேசிய மக்களில் ஒரு விழுக்காட்டினராவது இதைக் கடைப்பிடித்தால், நாளடையில் இது இனம்-மொழி-பண்பாடு-சமய எல்லைகளைக் கடந்து அனைத்து மலேசியர்களிடம் பேரளவில் பிரதிபலிக்கும் என்றும் அவர் பேசினார்.