கோலாலம்பூர் பிப்ரவரி 16-
எதிர்வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் கட்சி அம்னோவை ஆதரிக்கவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங்குடன் நடந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துன் டாக்டர் மகாதீர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அரசியல் குறித்து பல விவகாரங்களை பேசினோம். வரும் இடைத்தேர்தலில் எதிர்க் கட்சியை பாஸ் ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் இணக்கம் காணப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது என தலைநகரில் நடந்த தெற்காசிய ஜனநாயக விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மகாதீர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்கள்.
வெள்ளிக்கிழமை மதியம் திரங்கானுவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹடி அவாங், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு உறுதுணையாக இருக்க முடியும் என்பது குறித்து தான் பிரதமர் மகாதீருடன் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார்.