ஜோகூர்பாரு . ஏப் 13-
ஜோகூரில் புதிய மந்திரிபுசாரோடு மாநில ஆட்சி குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என அம்மாநிலத்தின் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தலைவரான ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார்.
மந்திரிபுசார் பதவியில் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் சில நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக ஒஸ்மான் சபியான் தெரிவித்தார்.
புதிய மந்திரி புசார் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்வந்த ஜோகூர் சுல்தான் மாநில ஆட்சி குழுவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.
இன்று காலை சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஒஸ்மான் இத்தகவலை வெளியிட்டார்.
ஜோகூரின் 16வது மந்திரிபுசாராக கடந்த ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒஸ்மான் சபியான் அம்மாநிலத்தில் குறுகிய காலம் அதாவது 11 மாத காலம் மட்டுமே பதவிவகித்த மந்திரி புசாராக திகழ்கிறார்.