கோலாலம்பூர், மே 4-

சர்ச்சைக்குரிய சமய போதகர் டாக்டர் ஸாக்கிர் நையக்கிற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் பண மோசடி குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

சுமார் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புடைய பண மோசடி மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை உலகில் பல பகுதிகளில் ஸாக்கிர் நைய்க் வாங்கியிருப்பதாக இந்திய அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டை கொண்டு வந்ததாக இந்திய இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டது.

மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர் உரையாற்றிய வருவதோடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் அவர் மீது இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஸாக்கிருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

குற்ற நடவடிக்கைகள் மூலமாக அவர் லட்சக்கணக்கான டாலர் மதிப்புடைய சொத்துக்களை சேர்த்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.  வெறுப்புணர்வை தூண்டும் அவரது உரைகளும் விரிவுரைகளும் இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களிடையே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டது. இந்திய அதிகாரிகள் இரண்டாவது முறையாக  ஸாக்கிருக்கு  எதிராக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

எனினும் முதல் முறையாக அவரது பெயர் நேரடியாக குற்றப்பத்திரிக்கையில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.