புத்ராஜெயா, மே 14-
தற்போதைய நோன்பு மாதத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தீவிரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்திய காவல்படைக்கு ஹிண்ட்ராஃப் சார்பில் முதற்கண் நன்றி தெரிவிப்பதாக ஹிண்ட்ராஃப் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, முக்கிய பிரமுகர்களை கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்ட தகவல் சமூகத்திலும் அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி திட்டமிட்டவர்கள், தீயணைப்பு வீரர் முகமட் அடிப்’பின் மரணத்திற்கு பழிதீர்க்கவும் இஸ்லாத்தின் மாண்பிற்கு மாறாக நடந்து-கொண்ட பிரமுகர்களைக் கொல்லவும் முடிவு செய்ததாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், தங்களின் திட்ட்த்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன்பே அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்திமீது அவரின் அலுவலகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்பொழுது ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் துன் மகாதீரை சந்திக்கவிருந்த நிலையில் கடந்த 2017, ஆகஸ்ட் 16-ஆம் நாள் அத்தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, பன்னாட்டு இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஐ.நா. மன்றத் தீர்மான(ஐசெர்ட்) விவகாரத்தில் பொன்.வேதமூர்த்தி தனித்துவிடப் பட்ட்தைப் போல, சீபீல்ட் ஆலய விவகாரத்தின்போது தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரண விவகாரத்திலும் பலி கடா ஆக்கப்பட்டார்.
இப்பொழுது தீவிரவாதத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படை-யாகத் தெரிகிறது. தவறான கருத்தை முன்வைப்பதுடன் இன-சமய அரசியலை முடுக்கிவிட்டு நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு பாதகத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.
எனவே, தேசிய காவல் படைத்தலைவர் அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு உயரிய பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்தி ஷான் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கார்த்தி ஷான் – சட்ட ஆலோசகர்
ஹிண்ட்ராஃப்.