ஷா அலாம், மே 22-
டத்தோஸ்ரீ அன்வாரின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் டச் என் கோ கார்டுகள் போலியானவை என டச் என் கோ அறிவித்துள்ளது.
தனது தயாரிப்பு அட்டைகள் மற்றும் சேவைகள் குறித்து பயனீட்டாளர்கள் டச் என் கோவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ளும்படி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாரின் புகைப்படத்தை கொண்ட டச் என் கோ கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட அளவிலான இந்த அட்டைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இதனை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணம் இன்றி இலவசமாக பயணம் செய்ய முடியும் என்றும் போலியான தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதால் பொதுமக்கள் இதனை நம்பி விடக்கூடாது என டச் என் கோ நிறுவனம் நினைவுறுத்தி உள்ளது.