அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஸாகிர் நாய்க் விவகாரம் அமைச்சரவை விவாதிக்கும்!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸாகிர் நாய்க் விவகாரம் அமைச்சரவை விவாதிக்கும்!

கோலாலம்பூர் ஜூன் 18-

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாய்க்கை நாட்டிலிருந்து வெளியேற்றும்படி இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மனு செய்தால் அது குறித்து அரசாங்கம் அமைச்சரவையில் விவாதிக்கும் என்பதை பிரதமர் துறை துணை அமைச்சர் முகமது ஹனிபா மைதீன் உறுதிபடுத்தினார்.

மலேசியா – இந்தியாவுக்கிடையே அரசதந்திர தொடர்பு சம்பந்தப்பட்டிருப்பதால் ஸாகிர் நாய்க்கை .நாட்டிலிருந்து வெளியேற்றும் நடைமுறை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சொன்னார். மலேசிய அரசாங்கம் பல்வேறு அம்சங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என முகமது ஹனிபா தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ மனு கிடைக்காதவரை இப்போதைக்கு இது குறித்து மேல் விவரங்களை கூறமுடியாது என தெலுக் இந்தானில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஹனிபா இத்தகவலை வெளியிட்டார்.

ஸாகிர் நாய்க்கை வெளியேற்றக் கோரும் அதிகாரப்பூர்வ மனு எதனையும் இந்திய அரசாங்கம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என இதற்கு முன் துணை பிரதமர் டாக்டர் வான் அஸிஸா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி நெருக்குதல் அளிக்கும் எந்த ஒரு தரப்பினருக்கும் மலேசியா அடிபணிந்து விடாது என ஏற்கனவே பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஸாகிர் நாய்க்கை தடுத்து வைப்பதற்கு புதுடில்லி தீவிரம் காட்டி வருகிறது. அந்த சமய போதகரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதா? அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை மலேசியாவுக்கு இருப்பதாகவும் டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன