கோலாலம்பூர், ஆக.3-

ஜாவி பாடத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள 100 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட தலைவர்களின்  நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாக கெராக்கான்  தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.

தேசிய மாதிரி ஆரம்பப் பள்ளிகளில் 4ஆம் ஆண்டு தொடங்கி 6ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஜாவி பாடத்தை நடத்த எண்ணம் கொண்டிருக்கும் கல்வி அமைச்சின்  நடவடிக்கைக்கு  13 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள், 15 ஜசெக மாநில இளைஞர் பகுதி தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 138 ஜசெக கிளைகள்  எதிர்ப்புத் தெரிவித்திருப்பது  பாராட்டத்தக்கது. எனினும், இந்த எதிர்ப்பு எந்தவொரு பலனும் அளிக்காமல் போகும் பட்சத்தில்  தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை ஜசெக தலைவர்கள்  விளக்கம் அளிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் சொன்னார்.

அடிமட்ட தலைவர்கள் பலர் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதானது ஜசெகவில் இன்னும் சிலர் மனசாட்சியுடன் இருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது என்றார் அவர்.

“எனினும், இக்கட்சி உறுப்பினர்களுக்கும் அடிமட்ட தலைவர்களுக்கும் ஒரு விஷயத்தை நான்  நினைவூட்ட விரும்புகிறேன். இக்கட்சி இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எதிர்க் கட்சியைப் போல மகஜர் வழங்குதல்  கூடாது.          மாறாக, பக்காத்தான் கூட்டணியில் தங்களின்  செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாவி பாடத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கும்  அரசாங்கத்தின் எண்ணத்தை மாற்றுவதற்கு நெருக்குதல்  கொடுக்க வேண்டும்” என்றார்.

அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்கத் தவறும் பட்சத்தில் தங்களின்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை இந்தக் கூட்டு நடவடிக்கை குழுவின் தோற்றுநர் விளக்க வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த மகஜரில் கையெழுத்திடாத 42 ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தமக்கு ஏமாற்றத்தை  அளித்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்த மகஜர்  மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்கத்  தவறினால்  இதில் கையெழுத்திட்ட சம்பந்தப்பட்ட ஜசெக உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவார்களா என்று டோமினிக் லாவ்  சவால் விடுத்தார்.  இல்லையேல், மகஜரில் கையெழுத்து போட்டு விட்டு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இவர்கள் வெளியேதான் நின்று கொண்டிருக்க வேண்டும். இவர்களால் எதிர்ப்பு கோஷமிடவும் மகஜர் கொடுக்க வும்  மட்டுமே முடியும் என்றால் இவர்கள் மீண்டும் எதிர்க்கட்சியாக இருப்பதே சிறப்பு என்றார்.