கோலாலம்பூர், நவ.17-

கடந்தாண்டு மே 9ஆம் தேதி முதல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் அடைவுநிலை மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே ஜொகூர் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவு காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான வீ.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரின் பெரும்பான்மை வாக்குகளிலான வெற்றி, புதிய மலேசியாவிற்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.

பக்காத்தான், கடந்த பொதுத்தேர்தலில் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலாக மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், தற்போது, அது 35 விழுக்காடு வரையில் குறைந்திருப்பதாக, இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பொதுத்தேர்தலில், இனப்பாகுபாடு, வயது, பின்னணி என எதுவும் பாராமல், மக்கள் பக்காத்தானின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருந்தனர்.

பக்காத்தானின் ஆட்சியில் தங்களது அடிப்படை உரிமைகள் தற்காக்கப்படுமா என்பது தொடர்பில், மலாய்க்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே அக்கூட்டணிக்கு அதிக வாக்குகளை அளித்திருந்தனர்.

ஆட்சி அமைத்த பிறகு, மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமைகள் உள்பட அவர்கள் சார்ந்த சட்டங்களில் திருத்தமோ வேறு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. தேசிய மொழியை பலப்படுத்த பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் ஜாவி அமல்படுத்தப்படுகிறது.

இஸ்லாம் சமயத்தை இழிவுபடுத்துவோரின் மீது அரசாங்கம் நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.

சமய போதகர்களான டாக்டர் ஜாக்கிர் நைய்க், ஜம்ரி வினோத் உள்பட பலர் மீது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க, இங்கு பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டினரால் தேடப்பட்டுவரும் நபருக்கு இரவு விருந்தோம்பலும் வழங்கப்படுகின்றது.

வீ.கணபதிராவ்

மாறாக, இல்லாத தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க முயற்சிக்கிறார்கள் எனக்கூறி, மலேசியர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர்.

அண்மையில், நடைபெற்ற மலாய்க்காரர்களின் தன்மானம் காக்கும் மாநாட்டில், சிலர் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை குடியேறிகள் என கூறியதோடு, சமூக ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, தங்களது உரிமைகள் குறித்து கேள்வியெழுப்பக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். ஒரு வேளை, அம்னோ, பாஸ் கட்சிகளைவிட பக்காத்தான் அதிக மலாய் உணர்வைக் கொண்டிருப்பதாக காட்டும் முயற்சியாக அது இருக்கலாம்.

பெல்டா, தாபுங் ஹாஜி முதலான நிதி அமைப்புகளை அரசாங்கம், காப்பாற்றியிருந்தாலும், அதனை மேற்கொண்ட தரப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மீது இதுவரையில் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அவர்களை தற்காப்பதற்காக மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை.

நாட்டின் கடன் சுமை இருப்பதால், பக்காத்தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர்  கூறி வருகிறார். இந்தியர்களின் அடையாள ஆவணங்கள் பிரச்சனைக்கு தீர்வு உள்பட நூறு நாளில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, வாக்குறுதிகளில் இல்லாத பள்ளி மாணவர்களின் காலணி வர்ணத்தை மாற்றுவது, பறக்கும் கார், காட் எழுத்து ஆகியவற்றிற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.

மலாய்க்காரர்களுக்காக அரசாங்கம் இவ்வளவு செய்துள்ள நிலையில், பக்காத்தானுக்கு அவர்களின் தற்போதைய ஆதரவு குறித்து கருத்துகணிப்புகள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். அதேப்போன்று, மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை அறிந்துக்கொள்ளவும் கருத்துகணிப்புகள் நடத்தப்பட வேண்டும்.

தற்போது, நாட்டின் 8ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்பதற்கான காலம் வந்து விட்டது. மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது. மாறாக, தேவை ஏற்பட்டால் அரசாங்கத்தின் தவறுகளை துணிந்து கேள்வி எழுப்ப வேண்டுமென நடப்பு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். தற்போது, அவரது கூற்றை தாம் பின்பற்ற விரும்புவதாக கணபதிராவ் கூறியுள்ளார்.

2 COMMENTS

  1. மேல் உல்ல கருத்துக்கு நன்ழறி, தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே கருத்து ஒரே நோக்கத்துடன் வழிப்பட்டால் அனைத்தும் சிரப்பாக அமையும்

Comments are closed.