தஞ்சோங் மாலிம், ஆக. 28-
மலேசியாவில் இளைஞர்களால் நடத்தப்பட்டஉலகத் தமிழ் இணைய மாநாடு அனைவரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக தனேசு பாலகிருஷ்ணன் தலைமையில், இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் மற்றும் உலக இணைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் குறித்து, இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் ஜெயமோகன் விவரித்தார்.
அடுத்த தலைமுறையினர் மத்தியில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், இணையத்தை ஆளும் மொழியாக தமிழ் உருமாற வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் மலேசியா பேராளர்கள் மட்டுமின்றி நாடளாவிய நிலையிலிருந்து 60 கட்டுரைகள் கிடைக்கப்பெற்றன.
இந்த அனைத்து கட்டுரைகளும் இணையம் மூலம் கற்றல் கற்பித்தலை மையமாகக் கொண்டு எழுத்தப்பட்டிருந்ததையும் ஜெயமோகன் சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டிற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து, பெருமைப் படுத்தினார் மாநாட்டின் செயலர் ஜனார்த்தனன் வேலாயுதம்.
அதோடு மாநாட்டுச் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கிய தமிழ்நேசனுக்கும் மாநாட்டின் தலைவர் தனேசு நன்றி தெரிவித்துக் கொண்டார். அனேகன்.காம் இணையத்தளமும் ஆதரவு வழங்கியதையும் சுட்டிக் காட்டினார். முன்னதாக மாநாட்டு கட்டுரைகள் அடங்கிய நூலை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்குவதற்கு டான்ஸ்ரீ கேவியஸ் இணக்கம் தெரிவித்ததையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.
3 நாட்கள் நடந்த இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டை இனி வரும் காலங்களில் மலேசிய இணைய பேரவை ஏற்று நடத்துமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக பேரூர் ஆதினம் மருதாசல அடிகள் ஆசியுரை வழங்கினார். தமிழ் மொழியின் பயன்பாடு காலம் கடந்து நிலைத்திருக்க வேண்டுமென்றால், இணையத்தின் பயன்பாடு அவசியமென்பதை அவரும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் விசித்திரா நிறுவனம் 4 விருதுகளையும் வழங்கினார்கள். அதில் தனேசுக்கு தமிழ்ச்செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது.