தஞ்சோங் மாலிம், ஆக 28-

உலகத் தமிழ் இணைய மாநாடு மிகச் சிறப்பாக முறையில் நடந்துள்ளது குறித்து வெளிநாட்டு பேராளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக நேர்த்தியான இந்த மாநாடு வரும் காலங்களில் மிகப் பெரிய விழிப்புணர்வை உண்டாக்குமென அவர்கள் தெரிவித்தார்கள்.

டாக்டர் செம்மல் மணலை முஸ்தாபா!
இணையத்தின் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் என்ற நோக்கத்துடன் நடந்த இந்த மாநாடு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் வழி கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் பயன்படும் வகையில் அமைந்திருந்தது.

இலக்குவனர் வள்ளுவனார்!
மாநாடு என்றாலே முதியவர்கள்தான் மிகுதியாக இருப்பார்கள். ஆனால் இந்த மாநாட்டில் பெரும்பாலோர் இளைஞர்கள்தான் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்த பயணம் தொடர வேண்டும் என அகர முதல மின்னிதலின் ஆசிரியர் வள்ளுவனார் கூறினார்.

முனைவர் காமாட்சி!
45 நாட்களில் ஒரு மாநாட்டை திறப்பட நடத்துவது என்பது சாதாரண காரியம் கிடையாது. ஆனால் சிறப்பான முறையில் இந்த மாநாட்டை நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதோடு மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் அன்பும் அரவணைப்பும் சிறப்புகளின் உச்சம் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் முனைவர் காமாட்சி தெரிவித்தார்.

சுகந்தி நாடார்
இது மாநாடு மட்டுமல்ல, தமிழர்களின் ஒற்றுமையை வளர்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. இங்கு வந்ததன் மூலம் பல புதிய உறவுகள் கிடைத்திருக்கின்றது. அதன் மூலம் தமிழுக்கு எப்படி தொண்டாற்ற முடியுமென்பதை பற்றி இனி யோசிக்க வேண்டுமென அமெக்காவிலிருந்து வருகை புரிந்த சுகந்தி கூறினார்.

பத்பநாத பிள்ளை
இந்த மாநாடு சிறப்பாக நடைபெற தொண்டுழியர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். எங்கள் நாட்டில் இந்த மாநாடு நடப்பதை போல ஒரு சூழ்நிலை நிலவியது. அதோடு காலை 8 மணி தொடங்கி இரவு 12 மணிவரை நடந்த ஒரே மாநாடாக இதுதான் இருக்குமென காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தின் ஆலோசகர் பத்பநாத பிள்ளை கூறினார்.

ராஜா 
இளைஞர்கள் நடத்தும் மாநாடு எப்படி இருக்குமென்ற அச்சத்துடன் தான் இதில் கலந்து கொண்டேன். ஆனால் அமர்களப்படுத்திவிட்டார்கள். இனி வரும் காலங்களில் இந்த மாநாடு மலேசியாவில் நடந்தால், அதிகமான பேராளர்களை மொரிசியஸிலிருந்து அழைத்து வருவதாகவும் மொரிசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சரின் ஊடக அதிகாரியான ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

முனைவர் லெட்சுமி கார்மேகம்
கற்றல் கற்பித்தல் குறித்து பல விளங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய மாநாடாக இது அமைந்தது. இந்த மாநாட்டு கட்டுரைகள் நிச்சயம் மற்றவர்களுக்கு அடுத்த சந்ததியினருக்கு பெரிய பயனாக அமையும்.

சரவணகுமார்!
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் நெருக்கிய உறவை உண்டாக்கும் மாநாடாக இது அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

கனகலெட்சுமி
இந்த மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இளைஞர்களின் முயற்சிக்கு மிகப் பெரிய சக்தி உள்ளது என்பதை இந்த மாநாடு உணர்த்தியுள்ளது. இந்த நட்புறவு தொடரும். இன்னும் சிறப்பான முறையில் அடுத்த மாநாடு நடைபெற வாழ்த்துகள்.