கோலாலம்பூர், ஆக. 9-
அனைவருக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இனம் சார்ந்த கட்சிகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
”துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் ஒரே இனவாத விளையாட்டை விளையாடுகிறார்கள்” என்றார்.
” ஒரு சில குடும்பங்களையும் நண்பர்களையும் வளப்படுத்தச் சிலர் பூமிபுத்ரா சலுகையில் விளையாடுகிறார்கள். இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மலேசிய மாணவர் தலைவர்களின் இணைய உச்சநிலை மாநாட்டில் பேசினார்.
”பிரிவினைக்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம்” என்ற கருப்பொருளில் பேசிய அன்வார், கொள்ளையர்கள் நாட்டை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.
“நீங்கள்தான் (இளைஞர்கள்) தீர்மானிக்க வேண்டும் – நாட்டிற்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்து மதிப்பீடு செய்யுங்கள்” என்று அவர் கூறினார்.
தாம் பிரதமரானால், வறுமை, கல்வி முறையின் சமத்துவமின்மை மற்றும் பொருளாதார துயரங்கள் குறித்து ஆராய்வேன் என்றார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 10 லட்சம் மக்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
“தற்போது சுமார் 860,000 பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் சார்பாக யார் பேசுகிறார்கள்?”என்றும் அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.