கோலகங்சார்ம் திசம்பர் 10:-
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 5 பேர் இன்று அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோலகங்சார் இஸ்கண்டாரியா அரண்மனையில் இன்று நடந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் அம்னோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சத்துவைச் சேர்ந்த ஒருவரும் அங்கம் பெற்றனர்.
இன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் பாஸ் கட்சியைச் சார்ந்த எந்த சட்டமன்ற உறுப்பினரும் நியமிக்கப்படவில்லை.
பெர்சத்து :
- டத்தோ ஸாய்னோல் ஃபாட்ஸி பஹாருடின் – சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினர் (பேரா மாநில பெர்சத்துவின் செயலாளர்)
அம்னோ :
- டத்தோ முகம்மாட் ஸோல்காஃப்லி ஹாருன் – லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர்
- டத்தோ ஷாருல் ஸாமான் யாஹ்யா – ருங்குப் சட்டமன்ற உறுப்பினர்
- டத்தோ டாக்டர் வான் நோராஷிக்கின் வான் நோர்டின் – கம்போங் காஜா சட்டமன்ற உறுப்பினர்
- கைருல் ஷாரில் முகம்மட் – போத்தா சட்டமன்ற உறுப்பினர்
நியமிக்கப்பட்ட ஐவரில் அம்னோவைச் சேர்ந்த நால்வரும் ஏற்கெனவே பேரா மாநில முன்னாள் முதல்வர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் வரிசையில் அங்கம் வகித்தவர்கள்.
பதவி உறுதிமொழிக்குப் பின்னர் ஈப்போ உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டத்தோ ஹிஷாம் ஹாஷிம் பேரா மாநில அரசாங்கத்தில் செயலாளர் ட்த்தோ சுவாய்டி அப்துல் ரஹிம் ஆகியோர் முன்னிலையில் நியமனக் கடிதத்தில் அனைவரும் கையொப்பமிட்டனர்.
இந்நிலையில் பேரா மாநிலத்தில் இந்தியர்களின் நிகராளிகளாக இந்தியர்கள் நியமிக்கப்படுவார்களா எனும் கேள்வி அங்குல்ள இந்தியர்களிடையே எழுந்துள்ளது.
மாநிலத்தின் முந்தைய முதல்வராகப் பதவி வகித்த டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமுவின் தலைமைத்துவத்தில் இந்தியர்களின் நிகராளி யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரின் தலைமையில் இந்தியர்களுக்கான விவகாரங்களைக் கவனிக்க மாநில முதல்வரின் ஆலோசகர் பதவிக்கும் இந்தியர் நியமிக்கப்படாதது பேரா மாநில இந்தியர்கள் புறந்தள்ளப்படுவதாக உணர்கிறார்கள்