ஈப்போ | பிப்பரவரி 18

பொங்கல் விழாவை சமய விழாவாக அடையாளப்படுத்தும் செயலை மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் முனைவர் நாகப்பன் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அந்தக் கூற்றை உடனடியாக மீட்டுக் கொள்ளவும் வேண்டும் என ஈப்போ குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம் எச்சரித்துள்ளது.

அண்மையில் மலேசியைத் தமிழ்மொழிக் காப்பகம் வெளியிட்ட பொங்கல் திருநாள் கையேடு குறித்து சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அந்த கையேட்டில் இருக்கும் தகவலுக்கு முரண்பட்டு மலேசிய சைவ சமயப் பேரவைத் தலைவர் முனைவர் நாகப்பன் தனதுஎதிர்க்கருத்தினை வெளியிட்டுருந்தார்.

பொங்கல் விழா என்பது உழவர் திருநாளாகவும் உழவுக்குத் துணையாக இருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாகப் பண்டையத் தமிழர் கொண்டாடி வந்துள்ளனர்.

இடையில் சமய நம்பிக்கைகளும் பின்பற்றலும் தோன்றிய பின்னர் அவரவர் ஏற்றுக்   கொண்ட சமய நம்பிக்கைகளோடு அவ்விழாவைக் கொண்டாடி வந்துள்ளனர்.

பொதுவான உழவர் திருநாளாக இருக்கும் பொங்கல் விழாவுக்குச் சமய சாயம் பூசும் அறிவீனச் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஈப்போ குறிஞ்சித் திட்டுத் தமிழ்க்கழகத்தின் தலைவர் பிரபு கிருட்டிணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முனைவர் நாகப்பன் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உண்ணதப்ப் பணியைச் செய்து வருகிறார். நாடு தழுவிய நிலையில் பட்டறைகளையும் வகுப்புகளையும் நடத்துவதோடு பல்வேறான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவரே பொங்கலுக்குச் சமயம் சாயம் பூசி தமிழின அடையாளத்தின் தனித்தன்மையைக் கெடுக்கும் மட்டமானச் செயல்பாட்டில் இறங்கியிருப்பது கண்டனத்துக்கு உரிய ஒன்று என பிரபு கூறினார்.