ஷா ஆலாம் | ஏப்ரல் 3:-

சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் 63 இந்துக் கோயில்களுக்கு அம்மாநில அரசின் இசுலாம் அல்லாத வழிபாட்டுத் தலா மேம்பாட்டு நிதியில் இருந்து ரி.ம. 630,000 வழங்கப்பட்டது. முதற்கட்டமாக வழங்கப்பட்ட அந்த நிதி 63 இந்துக் கோயில்களுக்குக் கிடைத்தது.

இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டும் சிலாங்கூர் மாநில அரசு இந்துக் கோயில்களின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டு வெ. 2.14 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் ரி.ம. 1 மில்லியனாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி பின்னர் ரி.ம. 1.7 மில்லியனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிதி ரி.ம. 2.14 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கணபதிராவ் கூறினார்.

அந்நிதிக்கானக் காசோலை வ்ழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கணாபதிராவ், கோயில்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்படும் இந்நிதியை வானுயர்ந்தக் கோபுரங்களை கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை கோயில்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கோயில்களில் சமயத்தை வளர்க்கும் முக்கியப் பணிகளாக சமயக் கற்பித்தல் நடவடிக்கைகளையும் சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகளையும் இந்த நிதியின்வழி முன்னெடுக்க வேண்டும்.

கோயில் கட்டடங்களைக் கட்டிவிட்டு அதைக் காப்பாற்றும் சமய அறிவுள்ள சமூகத்தை நாம் உருவாக்காவிட்டால், கட்டடங்கள் இருக்கும். அதில் கும்பிட ஆட்கள் அடுத்தத் தலைமுறை இருக்க மாட்டார்கள்.

மேலும்,இதே போல் கடந்த ஆண்டு கோவிட்-19 காலகட்டத்தில் கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில் வசதி குறைந்த மக்களுக்கு ஏறத்தாழ 14,000க்கும் மேலான உணவுக் கூடைகள் கோயில்கள் நிர்வாகமே ஏற்பாடு செய்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோயில்கள் எப்போதும் சமய மையங்களாக விளங்கிட வேண்டுமே தவிர அரசியல் மேடைகளாக மாறிவிடக்கூடாது.

எந்தப் பின்புலங்களையும் ஆராயாமல் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் பக்குவத்தை கோயில் நிர்வாகங்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் சமூக மையங்களாக கோயில்கள் திகழ்ந்திட முடியும் என்று கணபதிராவ் கூறினார்.