கோலாலம்பூர் : மே 19:-

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையில் “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களுக்கு விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளுடன் நிதி உதவியையும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் வழங்குவதாக அதன் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அது குறித்து ம.இ.கா.வின் தலைமையகத்தில் நடந்த செய்தியாலர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய தான் ஶ்ரீ விக்னேஸ்வரன், நமது தொப்புள் கொடி உறுவுகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கையும் கூட. இங்கும் (மலேசியாவில்) கோவிட்-19 பெருந்தொற்று வீரியம் கண்டுள்ளது. அதைத்தானே முதலில் கவனிக்க வேண்டும் எனவும் பலர் கூறி வருகின்றன. இரண்டுமே (மலேசியாவும் இந்தியாவும்) நமது சொந்தங்கள் தான். ஆக, இரண்டுக்கும் ம.இ.கா. தமது பங்கை ஆற்றும். இதனால் மலேசியா – தமிழக இருவழி உறவு நீடிக்க இது துணை புரியும் என அவர் விளக்கினார்.

ஒரு சுவாசக் கருவி ஏறத்தாழ ரி.ம. 7,000 வரை மதிப்பிலானது. முதற்கட்டமாக 100 சூவாசக் கருவிகள் நேரடியாக சீனா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளாதாகவும் எஞ்சிய 10 சுவாசக் கருவிகள் நாளை அனுப்ப இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் பேசிய மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன், தமிழகத்திற்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி கட்சியின் உறுப்பினர்களும் கட்சிக்கு ஆதர்வாக இருக்கும் கொடை நெஞ்சங்களும் வழங்கும் நிதி ஆகும். தற்பொழுது அனுப்பப்படும் சுவாசக் கருவிகள் நேரடியாகத் தமிழக சுகாதார அமைச்சர் பெற்றுக் கொள்வார். அதன் பின்னர் தான் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச இருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கம் 50 சுவாசக் கருவிகள் தமிழகத்திற்கு அனுப்பி இருந்தாலும் அவர்களின் தேவையின் கருதியும் தற்போதைய கோவிட்-19 சூழலைக் கருதியும் இந்த உதவியை ம.இ.கா. செய்கிறது என டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

அதே வேளையில், மலேசியாவில் கோவிட்-19 தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இந்தியக் குடும்பங்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்த ம.இ.கா. இது வரையில் 65,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது எனவும் அவ்வெண்ணிக்கை மித்ராவின் உதவி இல்லாமல் ம.இ.கா. தனித்து வழங்கிய எண்ணிக்கை எனவும் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இப்போதுள்ள சூழலைப் பார்க்கும் பொழுது சிலாங்கூரில் அவ்வாறான உதவிகளுக்கானத் தேவை அதிகமாக இருப்பதை ம.இ.கா. உணர்கிறது. தொகுதி பாகுபாடு இல்லாமல் உதவிகல் தேவைப்படுகிற இடங்களில் ம.இ.கா. உரிய சேவையை ஆற்றுகிறது எனத் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.