கிள்ளான், ஜூலை 16
சிலாங்கூரில் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது ஆசியான் வட்டாரத்தில் மிகவும் உயர்ந்த விகிதமாகும் என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
இதில் 30 விழுக்காட்டுத் தண்ணீர் உணவு உண்ண, குடிக்கப் பயன்படுத்தப்படும் வேளையில், எஞ்சியவை கார் கழுவ, துணி துவைக்க, செடிக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தப்படுவதால் சிலாங்கூர் மக்கள் அனைவரும் தண்ணீரை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
தண்ணீரை மிகவும் விவேகமாகப் பயன்படுத்துவதை சிலாங்கூர் மக்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாலான் பெக்கான் பாருவில் உள்ள ஓர் அடுக்ககத்தில் தண்ணீர் சேமிக்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அஸ்மின் குறிப்பிட்டார். இதனிடையே, சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் 150 லிட்டர் பயன்படுத்தப்படும் வேளையில், தாய்லாந்தில் 90 லிட்டர் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஒரு நாளைக்கு சராசரியாக 165 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஒரு குடும்பம் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது என அஸ்மின் அலி மேலும் கூறினார்.