நியூ யார்க், செப்.13

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்நிறுவனம் இன்று தனது புதிய படைப்புகளை உலகிற்கு வெளியிட்டது. ஐ-போன் 8 மற்றும் 8 ப்ளஸ் மட்டுமல்லாமல் ஐ-போன் X என்ற தனது அடுத்த படைப்பையும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் வெளியிட்டார்.

5.8 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது அதிநவீன ஐ-போன் X . இதில் ‘ஹோம்’ பட்டனை விலக்கி, முன் பகுதி முழுக்க ஸ்க்ரீனை கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்த போனில் விரல் ரேகை பதிவு கிடையாது. அதற்கு பதிலாக, மொபைல் சேவையில் முதல்முறையாக, முகத்தை பதிவு செய்து போனை லாக் செய்யும் முறையை இதில் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

விரல் ரேகையை விட இது ஆயிரம் மடங்கு பாதுகாப்பானது என்றும், கண்ணாடி, தொப்பி போன்றவற்றை அணிந்தாலும் இந்த போன் முகத்தை பதிவு செய்ய குழப்பமடையாது, என்றும் குக் கூறினார்.ஐபோன் X-சை வாங்க அடுத்த மாதம் 27 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். நவம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.  இதன் தொடக்க கட்ட விலை 999 அமெரிக்க டாலர்களாகும்.

அடுத்ததாக வெளியாகும் ஐபோன் 8 மற்றும் 8 ப்ளஸ் போன்களின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது ஆப்பிள். மேலும் வயர்லெஸ் சார்ஜிங் முறையும் இதில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. வரும் காலத்தில் அனைத்து பொது இடங்களிலும் ஒரே நேரத்தில் பலர் வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் வசதி வந்துவிடும் என குக் நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் 15 ஆம் தேதி முதல் ஐபோன் 8 மற்றும் 8 ப்ளஸ் போன்களை வாங்க முன்பதிவு செய்துகொள்ளலாம். இதே மாதம் 22ம் தேதி முதல் போன் விநியோகிக்கப்படும். இவற்றோடு, ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 3 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச்சையும் அறிவித்தனர். மேலும், ஆப்பிள் டிவி 4k மற்றும் 4k HDR என்ற இரு கருவிகளையும் அறிவித்தனர்.

நவீன டிவிகளில் இந்த ஆப்பிள் டிவியை கனெக்ட் செய்தால், அதன் மூலம், பல்வேறு இணையதளங்களில் உள்ள படங்களையும், வீடியோக்களையும், 4k தரத்தில் பார்க்கலாம்.