சிரம்பான் | 14/7/2021 :-
கடந்த மாதம் வரை நெகிரி செம்பிலானில் 142 சிறார் துன்புறத்தல் நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சமூக மேம்பாட்டு திணைக்களத்தின் இயக்குநர் ரோஸ்னா சார்டி தெரிவித்துள்ளார்.
அவற்றில் 85 உடல் துன்புறுத்தல்கள், 36 பாலியல் துன்புறத்தல்கள், குழந்தைகள் கவனிக்கப்படாத 13 நேர்வுகள், 4 உணர்ச்சிப்பூர்வமான துன்புறுத்தல்கள், 4 பெற்றோர்களால் கைவிடப்பட்ட நேர்வுகள் என 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 160 சிறார் துன்புறுத்தல் தொடர்பான நேர்வுகளில் மிக அதிகமாக 60 உடல் துன்புறுத்தல் நேர்வுகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் கடந்த ஆண்டு 324 சிறுவர்கள் காப்பாற்றப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறார்களை உட்படுத்தியத் துன்புறுத்தல் தொடர்பான நேர்வுகள் அதிகரித்திருப்பது இவ்விவகாரம் உடனடியாகக் கவனித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிகுறியைக் காட்டுகிறது.
காப்பாற்றப்பட்டப் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிற நிலையில் உள்ள உறவினர்களிடம் (Orang Yang Layak dan Sesuai – OYLS) ஒப்படைக்கப்படுவர்.
மேலும், குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 54இன் படி ஆதரவு அற்றக் குழந்தைகளை சிறார் காப்பகத்தில் 18 வயதுக்குள் மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பொருளாதாரச் சிக்கல், பெற்றோர்களின் கவனக்குறைவு, போதைப்பொருள், திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவது போன்ற பிரச்சனைகளே சிறார் துன்புறுத்தலுக்குக் காரணம் என ரோஸ்னா கூறினார்.
இவற்றைக் கையாள சமூக நல மேம்பாட்டு திணைக்களம் இது போன்ற பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆலோசனைகள், சட்ட உதவிகள் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 9 சிறார் நடவடிக்கை மையங்களையும் அது கொண்டுள்ளது.
மாநிலக் கல்வித் திணைக்களம், அரச மலேசியக் காவல் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமான ‘Sahabat Bijak’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்குத் தாங்கள் எதிர்கொள்ளலாம் என்கிற நிலையில் இருக்கின்ற பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்க – இடைநிலைப் பள்ளிகளில் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட அத்திட்டத்தின் வாயிலாக 4,345 சிறுவர்கள் பயனடைந்துள்ளனர் என ரோஸ்னா குறிப்பிட்டார்.
சிறார் துன்புறுத்தல் குறித்துப் பொது மக்கள் தகவல் தெரிவிக்க நாள்தோறும் செயல்படும் மையங்களுக்கு 019-2615999 புலனம் வாயிலாகவும் Talian Kasih 15999 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.


