கோலாலம்பூர் | 9/8/2021 :-

சபாவின் துணை முதலமைச்சர் புங் மொக்தார் ராடின், கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மடின் அலாமின் உட்பட 13 பேரின் ஆதரவு மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் கடிதங்களை அம்னோ வெளியிட்டுள்ளது.

பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினுக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளாதாகக் குறிக்கும் அக்கடிதங்கள் முன்னதாக மாமன்னரிடம் வழங்கப்பட்டவையாகும்.

கடந்த மாதம் 29 ஆம் நாள் முதல் இம்மாதம் 3 ஆம் நாள் வரையில் 13 பேரால் அக்கடிதங்கள் கையொப்பமிட்டு இருப்பதை வழக்கறிஞர் சந்திர சேகரன் உறுதிப்படுத்தினார்.

அக்கடிதங்கள் அம்னோவின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்டன.

அதில் கையொப்பமிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் :

  • நஜிப் இரசாக் (பெக்கான்)
  • அஸாலினா சயிட் ஓத்மான் (பெங்கெராங்)
  • முகம்மட் நிஸார் ஸக்காரியா (பாரிட்)
  • அஸீஸ் அப்துல் இரகிம் (பாலிங்)
  • நோ ஓமார் (தஞ்சோங் காராங்)
  • அகமாட் ஸாஹிட் ஹமிடி (பாகான் டத்தோ)
  • அகமாட் நஸ்லான் இட்ரிஸ் (ஜெராண்டூட்)
  • அகமாட் ஜஸ்லான் யாக்கூப் (மாச்சாங்)
  • தெங்கு இரசாலி ஹம்ஸா (குவா மூசாங்)
  • ரம்லி முகம்மட் நோர் (கேமரன் மலை)
  • அகமாட் மச்ளான் (பொந்தியான்)
  • சம்சுல் அனுவார் நசரா (லெங்கோங்)
  • புங் மொக்தார் ராடின் (கினாபாத்தாங்கான்)
  • முகம்மட் அலாமின் (கிமானிஸ்)

இப்பட்டியலில் தற்போது புதிதாக இணைந்தவர்கள் புங் மொக்தார் ராடின் (கினாபாத்தாங்கான்), முகம்மட் அலாமின் (கிமானிஸ்) ஆகியோர் ஆவர். எனவே, மகியாதீனுக்கு வழங்கப்பட்ட ஆதரவை மீட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அக்கடிதங்களால், இன்னமும் பிரதமர் மகியாதீனுக்குப் பெரும்பான்மை இருப்பதில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர் டாக்டர் நோரைனியைத் தவிர அம்னோவின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் மகியாதீன்.

இதன் அடிப்படையில், மகியாதினுக்கு தற்போது 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி இருப்பதாகவும் குறைந்தபட்ச பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு இன்னும் 13 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.