கோலாலம்பூர் | 15/8/2021 :-
நாளை மாமன்னரைப் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் சந்திக்கவிருப்பதாகவும் அப்போது அவர் தமது பதவி விலகல் கடிதத்தை மாமன்னரிடம் வழங்குவார் எனவும் பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தின் உறுப்பினர் முகம்மட் ரெட்ஸுவான் முகம்மட் யூசோஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் நடந்த பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்புக் கூட்டத்தில் இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டதாக ஆலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
நாளை அமைச்சரவையின் சிறாப்புக் கூட்டத்திற்குப் பிறகு மாமன்னரை மகியாதீன் முகம்மது யாசின் சந்திக்கவிருப்பார் என அவர் மேலும் சொன்னார்.
தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள மகியாதீன் எவ்வளவோ முயற்சி செய்து விட்டதாகவும் ஆனால், அது பலனளிக்கவில்லை எனவும் முகம்மட் ரெட்ஸுவான் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றாத்தில் மகியாதீனுக்கு வழங்கிய ஆதரவை சிலர் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அந்தப் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு சரியானது எனவும் மரியாதையனது எனவும் குறிப்பிட்ட முகம்மட் ரெட்ஸுவான், அப்பதவி விலகலை ஏற்பதும் மறுப்பதும் மாமன்னரின் முடிவில் இருப்பதாகவும் கூறினார்.


