சென்னை.17 –
தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இணையவிருப்பதாக கூறப்படும் படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்ககூடும் என பரவலாக பேசப்படுகிறது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.
முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு – ரகுல் பிரீத் சிங் நடிப்பில் ‘ஸ்பைடர்’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 62 ஆவது திரைப்படத்தை முருகதாஸ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.எனினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்துக்குப் பிறகு இந்தியாவில் தற்போதைக்கு படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை என லைக்கா நிறுவனம் தெரிவித்தை அடுத்து சன் பிக்சர்ஸ் விஜய்- முருகதாஸ் படத்தை தயாரிக்க விருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்ககூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழில் தடையற தாக்க திரையில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ திரைப்படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்று விட்டார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது மீண்டும் விஜய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலுவாக காலூன்ற விருக்கிறார்.
ரகுல் பிரீத் சிங் தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி, கத்தி திரைப்படங்களுக்குப் பிறகு விஜய்யும், முருகதாசும் இணையவிருப்பதால் விஜய் 62 ஆவது படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.