கோலாலம்பூர் \ 19/11/2021 :-

மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஓற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா பதில் சொல்ல வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவுறுத்தி இருந்தாலோ  அல்லது அவர் தடுக்கப்பட்டிருந்தாலோ அது குறித்து எம்ஏசிசி தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் சட்டப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பது தொடர்பில் ஹலிமாவுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஒத்திசைவாக நடந்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஹலிமா நிறைவுரை ஆற்றியபொழுது, மித்ரா தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மூர்க்கத்தனமாக மறுத்த-துடன் எம்ஏசிசி விசாரணையைக் காரணம் காட்டி தப்பிக்க முனைந்துள்ளார். மித்ரா, எம்ஏசிசி விசாரணையின்கீழ் இருப்பதைக் காரணம் காட்டுவது பொறுத்தமல்ல; சட்டப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த ஹலிமாவின் உள்நோக்கமும் அவரைப் பாதுகாப்பதற்காக துணை சபாநாயகர் முகமட் ரஷீத் ஹஸ்னான் மேற்கொண்ட நடவடிக்கையும் ஹலிமா பெரிய அளவிலான நிதி முறைகேட்டில் ஈடுபட்டதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டு-கிறது. குறிப்பாக, ஹலிமாவின் இருட்டடிப்பு நடவடிக்கைக்கு துணை சபாநாயகரின் உதவியும் உறுதுணையும் அளித்திருப்பது போல் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் உரிய பதிலைக் கூறாமல் அவர் தடுக்கப்பட்டால், அத்தகைய ஆலோசனையை வழங்கியது யார்? அல்லது நாடாளுமன்றத்தில் எந்த விளக்கமும் அளிக்க வேண்டாம் என்று எம்ஏசிசி-யிடம் இருந்து ஹலிமா ஆலோசனை பெற்றாரா? அவ்வாறு உண்மையாக இருந்தால், எம்ஏசிசி தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும்.

அத்துடன், ஹலிமா எம்ஏசிசி-யின் விசாரணையில் உள்ளாரா என்பதையும் அதனால்தான் விசாரணை முடிவடையும்வரை சில தகவல்களை அவர் வெளிப்படுத்தக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாரா என்பதையும் எம்ஏசிசி உறுதிப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பொறுப்புகூற வேண்டிய அமைச்சர், புலன் விசாரணைக்கு உட்பட்டிருக்கும்பொழுது நாடாளுமன்ற அவையில் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பேசுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளாரா என்பதற்கான சட்டம் குறித்து தெளிவில்லாமல் இருக்கிறது. எது எவ்வாறாயினும், தன்னுடைய கண்காணிப்பில் உள்ள நிதி தொடர்பில் நடந்துள்ள முறைகேடு குறித்து பதில் சொல்வதற்கு மூர்க்கத்தனமாக மறுதலித்து வருகிறார் என்பது மட்டும் உண்மை;

அதேவேளை, ஹலிமா புலன் விசாரணைக்கு உட்பட்டிருப்பதாகவும் அதனால்தான் எந்த விவரத்தையும் அவரால் சொல்ல முடியவில்லை என்பதையும் வெளிப்படையாகத் தெரிவித்தால், அது ஏற்றுக்கொள்ளக்-கூடியது. அப்படி அது உண்மையானால், விசாரணை முடியும்வரை அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஹலிமா, கீழ்க்காணும் ஐயத்திற்குரிய விசயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவும் விவரம் தரவும் தவறிவிட்டார்:

1.         ஹலிமாவின் கண்காணிப்பில் இருந்த வெ.85 மில்லியன் காணாமல் போயிருப்பது;

2.         மித்ரா நிதி ஓர் அரசியல் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் பங்கு போடப்பட்டிருப்பது;

3.         மித்ரா ஏற்படுத்தியிருந்த வெளிப்படையான நிதி வழங்கல் நிர்வாகத்தையும் அதன் இணையப் பக்கத்தையும் ஹலிமா நீக்கியது;

4.         மித்ரா இயக்குநரும் துணை இயக்குநரும் வகித்த ஜூசா பி, ஜூசா சி பொறுப்புகளில் இருந்து ஹலிமா அவர்களை பதவி இறக்கம் செய்தது;

5.         2021-ஆம் ஆண்டில் நாடு கொரோனா பாதிப்பினால் ஏறக்குறைய முழு முடக்கத்தில் இருந்த நேரத்திலும் மில்லியன் கணக்கான வெள்ளி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது;

நாடாளும்னறத்தில் ஹலிமா நடந்துகொண்ட விதம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அவமானமானது. நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் பதிலையும் விளக்கத்தையும் பெறும் அவையாகும்; அத்துடன், ஆளும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பேற்கும் சபையுமாகும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.