பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும் அதனை அன்பளிப்பு எனச் சொல்லுவது எவ்வகையிலும் நியாமில்லை என பிகேஆர் சாடியுள்ளது.  அத்திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அன்பளிப்பு என்று குறிப்பிட்டுள்ள தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக்கிற்கு எதிராக பிகேஆர் தலைமைப் பொருளாளர் டான் ஈ கியு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பளிப்புக்கும் ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புக்கும் உள்ள வேறுபாட்டை சாலே சைட் கெருவாக் புரிந்து கொள்ள முடியவில்லை என டான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சாடியுள்ளார்.  சுங்கை பூலோ- எம்ஆர்டி ரயில் பாதைக்கு வெ. 2,100 கோடி செலவானது. அதற்குச் செலவிட்ட நிதியானது கருவூலத்தில் இருக்கும் பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) போன்ற வரிகளால் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணமாகும்.

அதனால், எம்ஆர்டி திட்டத்தை ஓர் அன்பளிப்பு என்று சொல்லாதீர்கள் என டான் அறிவுறுத்தினார்.  அம்னோ-, தேசிய முன்னணி அரசாங்கத்தின் உண்மையான அன்பளிப்புகள் எவை என்றால் கொடூரமான ஜிஎஸ்டி, 1எம்டிபி ஊழல், மக்களுக்குத் தொல்லை தரும் விலைவாசி உயர்வு ஆகியவைதான் என்றாரவர். அதன் தலைவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்களை வாட்டி வதைக்கிறது அம்னோவும்- தேசிய முன்னணி அரசாங்கமும் என டான் குறிப்பிட்டார்.