கோலாலம்பூர், ஜூலை 26-

பிரதமர் பதவியிலிருந்து தம்மை விலகக்கோரி இன்று தலைநகரில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மேலும், இப்பேரணி சுமூகமாக நடைபெற உதவிய போலீஸ், தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள், மருத்துவ சேவையினர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் அவர் நன்றி கூறிக்கொண்டார்.

ஜனநாயகக் கோட்பாடுகளை, குறிப்பாக கருத்து சுதந்திரத்தை தாம் மிகவும் மதிப்பதாக பிரதமர் கூறினார்.

“விமர்சனங்களையும் மாறுபட்ட கருத்துகளையும் பகைமையாகப் பார்க்கக் கூடாது. அவை நாட்டின் முதிர்ச்சியான, முற்போக்கான மற்றும் இறையாண்மை கொண்ட ஜனநாயகத்தின் துடிப்பாக வளர வேண்டும். ஆனால், அவை ஒழுங்காகவும், அமைதியாகவும், நாட்டுப்பற்றுடனும் நடைபெற வேண்டும்,” என்று அவர் மேலும் சொன்னார்.

உதாரணமாக, பிரதமரின் கேள்வி நேரம் (PMQT) நாடாளுமன்றத்தில் நடைபெறுவதை குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ அன்வார், இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு கேள்வியையும் தம்மிடம் முன்வைக்கலாம் என்றார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அனைத்து அமர்வுகளிலும், குறிப்பாக PMQT அமர்வுகளில், பங்கேற்குமாறு தொடர்ந்து வலியுறுத்துங்கள்.

அனைவரையும் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடவும், பொதுவான இலக்குகளை அடையவும், புதிய துறைகளில் முன்னேற்றம் காணவும், நாட்டை உறுதியாகவும் ஆற்றலுடனும் முன்னோக்கி கொண்டு செல்லவும் அழைக்கிறேன்,” என்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பேஸ்புக் பதிவில் மேலும் கூறினார்.