அக்டோபர் 5இல் மஇகா எதிர்காலத்தை தீர்மானிக்கும் பேராளர் மாநாடு!

ஷா ஆலாம்,

மஇகா தேசிய முன்னணியில் தொடருமா இல்லையா என்பது குறித்து தீர்மானம், வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஐடிசிசி ஷா ஆலாமில் நடைபெறவுள்ள மஇகா பேராளர் மாநாட்டில் முடிவுச் செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

கட்சித் தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன், மஇகாவின் நிலைப்பாட்டை பேராளர்கள் முன்னிலையில் அறிவிப்பார் என இம்மாநாட பெரும் கவனம் பெறுகின்றது. இந்த மாநாடு, ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவின் எதிர்காலத்தையும தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி என்ற் நிலைப்பாட்டையும் முடிவுச் செய்யவுள்ளது.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தனது பங்கிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை மஇகா நீண்டநாட்களாக வெளிப்படுத்தி வருகிறது. இந்திய சமூக நலனை கருத்தில் கொண்டு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூட மக்கள் மத்தியில் தொடர்ந்த நிலவுகிறது.

இதனிடையே, மஇகா மற்ற கூட்டணிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்திருந்தார். கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணனும் தொடர்ந்து மஇகாவின் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றார். இத்தகைய அறிக்கைகள, மஇகாவின் அடுத்தடுத்த பயண திசையைப் பற்றிய ஊகங்களை அதிகரித்துள்ளது.

அண்மையில், பெர்சத்து இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கேசவன் கந்தசாம கலந்து கொண்டது, தேசிய முன்னணியில் மஇகாவின் நிலைப்பாடு குறித்த கேள்வியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முன்னேற்றம், ஒற்றுமை கூட்டணியுடன் மஇகாவின் உறவில் புதிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது.

அரசியல் விமர்சகர்கள், அக்டோபர் 5 பேராளர் மாநாடு மஇகாவின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் முக்கிய தருணமாக அமையும் எனக் கருதுகின்றனர். அம்னோவுடன் ஜனநாயக செயல்க்கட்சி இணைந்து ஆட்சி செய்யும் போது, மஇகா பெரிக்காத்தான் கூட்டணியுடன் இணைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.