சீபீல்டு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமை நினைவுகள் விழா

322

ஷா அலாம், செப்டம்பர் 7 – 104 ஆண்டு வரலாற்றைக் கொண்ட சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள், தேசிய தினத்தன்று கோத்தா கெமுனிங் ஒன்சிடியம் மண்டபத்தில் சிறப்பான நினைவுகள் ஒன்றுகூடல் விழா நடத்தினர்.

மலர் வெளியீடு 

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, சுமார் 104 ஆண்டு கால வரலாறைக் கொண்ட அந்த பள்ளியின் நினைவாக சிறப்பு மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.. இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலஞ்சென்ற திரு .மாயகிருஷ்ணன் அவர்களின் புதல்வர் டத்தோ டாக்டர் ஜெயப்பிரகாசம் அவர்கள் அந்த மலரை அதிகாரப்பூர்வமாக வெளியிடு செய்தார்.

அவர், முன்னாள் ஆசிரியர்களை அடையாளம் கண்டு கௌரவித்த முன்னாள் மாணவர்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர்களின் பெருமை

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முனைவர் க. ஹரிகிருஷ்ணன், “சீபீல்டு தமிழ்ப்பள்ளி மலேசியர்களின் குரலாகவும், குரல்களை உருவாக்கிய பள்ளியாகவும் திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.

அவர், ஊடகத் துறையில் முன்னாள் மாணவர்களான முனைவர் மு.சங்கர் (மலேசிய வானொலி தொலைக்காட்சி), ஜானகி சுப்ரமணியம் (தும்புவான் மிங்கு), முன்னாள் தமிழ்நேசன் ஆசிரியர் கே. பத்மநாபன் ஆகியோரை எடுத்துக்காட்டாகச் சொன்னார். தாம் கூட டிவி2-இல் தமிழ்ச்செய்தி வாசித்த அனுபவத்தை பகிர்ந்தார்.

அத்துடன், சைவ சமயத்தில் பெருமை சேர்த்த முனைவர் ந. தர்மலிங்கம், தன்னம்பிக்கை இயக்கத்தை முன்னெடுக்கும் பாலசுப்ரமணியம் ஆகியோரும் சீபீல்டின் பெருமை மாணவர்கள் எனக் குறிப்பிட்டார்.

விழாவில் பெருமை தரும் பங்கேற்பு

சுமார் 250 முன்னாள் மாணவர்கள் மற்றும் 15 முன்னாள் ஆசிரியர்கள் கலந்து, பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தாய்ப்பள்ளியின் பாசமான சூழலை அனைவரும் மீண்டும் அனுபவிக்க வைத்தது.

பள்ளிக்கான பங்களிப்பு

விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தற்போதைய தலைமையாசிரியர் திருமதி லதா கணேசனிடம், முன்னாள் மாணவர்கள் முயற்சியில் வாங்கப்பட்ட OHP ஒளிப்படக் கருவி வழங்கப்பட்டது. இது, “படித்த பள்ளிக்காக ஏதாவது செய்ய வேண்டும்” என்ற மாணவர்களின் பாசத்தை வெளிப்படுத்தியது.

விழாவில், தேசிய தினத்தையும் சிறப்பிக்கும் வகையில், அனைவரும் தங்கால் தீகா புலுஹ் சத்து பாடலைப் பாடி, தேசியக் கொடியை அசைத்தனர். “மெர்டேகா” முழக்கத்தில் மண்டபம் அதிர்ந்தது.

தேநீர் உபசரிப்புடன் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
சீபீல்டு தமிழ்ப்பள்ளி தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நல்ல குடிமக்களை உருவாக்கும்என்ற உறுதிமொழியோடு அனைவரும் விடைபெற்றனர்.