கோலாலம்பூர்:
நவராத்ரியை முன்னிட்டு துன் எச்.எஸ்.லீ ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து பூஜைகள், நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 7-ஆம் நாளான செப்டம்பர் 29-ஆம் தேதி டத்தோ ந.சிவக்குமார் தலைமையில் வியாபாரி உபய பூஜை நடைபெற்றது.
இதன் முக்கிய அங்கமாக, அன்பு இல்ல பிள்ளைகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த வசதிக் குறைந்த 200 மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கான அனைத்து அன்பளிப்புகளையும் மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா எடுத்து வழங்கினார்.
அதேபோல், தனித்து வாழும் தாய்மார்களுக்குச் சேலைகளும் வழங்கப்பட்டதோடு பூஜை காலாஞ்சியும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.
மக்களுடன் இணைந்து பயணிப்பதும் அவர்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதும் தமது நோக்கமென டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டார்.
இந்த அன்பளிப்புகள், வியாபாரிகள் உபய நாட்டாமை டத்தோ ந. சிவக்குமார் தலைமையில் கிருஷ்ணன், விக்னேஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா இந்த விழாவிற்கு தலைமையேற்றார்.
மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் பக்தர்களுக்குத் தேவையான அனைத்தும் சிறப்பான முறையில் தொடர்ந்து நடக்குமென்பதையும் தான்ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த டத்தோ சிவக்குமார், மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் மக்கள் பணி எப்போதும் தொடருமென உறுதியளித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.