கோலாலம்பூர்:

நாட்டிலுள்ள இந்திய உணவங்களில் வேலை செய்ய 8000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக மலேசிய இந்திய உணவகச் சங்கம், பிரிஸ்மாவின் தலைவர் ஜே. சுரேஷ் தெரிவித்தார்.

உள்நாட்டு தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை செய்ய முன்வராததால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அரசின் உடனடி உதவியும் அனுமதியும் தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் உணவகங்களில் உணவருந்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு, உணவகத் துறையைச் சேர்ந்தவர்கள், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக விவசாயத் துறையினருடன் கலந்தாலோசனைகள் நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

அத்துடன், உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி செலவைக் குறைக்கும் வழிகள் குறித்து அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, இன்று மலேசிய இந்திய உணவச் சங்கத்தின் 25-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.