கோலாலம்பூர்:

லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா துரைசிங்கம், மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 25-ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதை அச்சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் வழங்கினார்.

டத்தோ ரெனா துரைசிங்கம் கடந்த பல தசாப்தங்களாக மலேசியாவில் உணவகத் துறையில் முன்னோடி சாதனைகளைப் படைத்து வருகிறார்.

அதனை தொடர்ந்து, நாட்டின் உணவகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நாசி கண்டார் பெலித்தா (Nasi Kandar Pelita), மலேசியாவின் மிகப்பெரிய உணவகத் தொடர் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டு விருதைப் பெற்றுள்ளது. விருதை பெலித்தா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ரமேஷ் முருகன் பெற்றுக் கொண்டார்.

நாசி கண்டார் பெலித்தா நிறுவனம் தற்போது மலேசியா முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கிளைகளையும், இந்தியாவின் சென்னை நகரில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.
‘இந்தியா கேட்’ நவீனத்துவமான உணவகம் விருதைப் பெற்று கவுரவிக்கப்பட்டது. அவ்விருதை உணவகத்தின் நிறுவனர் சரவணன் சுப்ரமணியம் பெற்றார்.
உணவகத்துறை முன்னேற்றத்திற்கு அவரின் புதுமையான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

‘இந்தியா கேட்’ உணவகம், தனது நவீன அலங்காரம், பாரம்பரிய இந்திய உணவுகளுடன் இணைந்த புதுமையான சுவைகள், மற்றும் வாடிக்கையாளர் சேவையில் கொண்டிருக்கும் தனித்துவமான அணுகுமுறைக்காக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 25-ஆம் ஆண்டுபொது கூட்டம் ரினைசன்ஸ் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.