கோலாலம்பூர், அக்.8:
மலேசிய இந்து சங்கத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் மாண்புமிகு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்கள் வெளியிட்ட கூற்றுக்கு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இந்து மதத்தின் உயரிய மதிப்பை நிலைநிறுத்தவும், கோவில்கள் சட்டபூர்வமாகவும் சமய அடிப்படையிலும் செயல்படவும் மலேசிய இந்து சங்கம் பல தசாப்தங்களாக சேவை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
“இத்தகைய ஒரு தேசிய அமைப்பை மரியாதையற்ற முறையில் விமர்சித்தும், இடைதரகர் என தவறாக குற்றம் சாட்டியும் டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்கள் அளித்த கூற்றை மலேசிய இந்து சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், மலேசிய இந்து சங்கம் எந்த நிலையிலும் அரசாங்கத்திடம் ஆலய நிதியை தங்களுக்கு வழங்குமாறு கோரவில்லை என்றும், அந்த நிதி நேரடியாகக் கோவில்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
“அமைச்சர் இதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் செயல்படுகிறார் என்றால், முதிர்ச்சி இல்லாதவர்கள் அமைச்சர் ஆனால் சமுதாயம் சாபக்கேடாகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கடுமையாக குறிப்பிட்டார்.
கோவில்களுக்கு வழங்கப்படும் RM20 மில்லியன் நிதி திட்டம், ஒற்றுமை துறை அமைச்சகத்துடனும் மலேசிய இந்து சங்கத்துடனும் இணைந்து தொடங்கப்பட்ட முயற்சியாகும் எனவும், அதை தனிப்பட்ட முயற்சியாக டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்கள் கூறுவது உண்மையை மாறுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மடானி அரசு கோவில்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்டிருந்தால், ஒரு கோவிலுக்கு RM20,000 வழங்குவது போதாது; குறைந்தபட்சம் RM100,000 ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
“எந்த அரசியல் குறுக்கீடுகளும் அல்லது தவறான குற்றச்சாட்டுகளும் மலேசிய இந்து சங்கத்தின் நிலைப்பாட்டை தளரச் செய்யாது. எங்கள் அமைப்பு என்றும் சட்டத்தின் வரம்பிற்குள், சமய போதனைகளின் அடிப்படையில் சமூக நலனுக்காக செயல்படும் தேசிய அமைப்பாகவே நீடிக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.
( மலேசிய இந்து சங்கத்திற்கு, டத்தோஶ்ரீ இரமணன் அளித்த பதில்: காணொலி https://www.tiktok.com/@anegunnews/video/7558749385413250325?is_from_webapp=1&sender_device=pc&web_id=7461992722422711828